இந்தியாவில் புதிய ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது சுசுகி நிறுவனம்..!
ஜப்பானை சேர்ந்த சுசுகி நிறுவனம் புதிதாக ஜிஎக்ஸ்எஸ்-ஆர் 1000 மற்றும் ஜிஎக்ஸ்எஸ்-ஆர் 1000ஆர் என்ற இரண்டு ஸ்போர்ட்ஸ் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுதும் இதுவரையில் 10 லட்சம் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் பைக்குகளை விற்பனை செய்துள்ள சுசுகி நிறுவனம், புதிய தலைமுறை ஜிஎஸ்எக்ஸ்-ஆர் பைக்கை முந்தைய மாடலை காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தியுள்ளது. 6வது தலைமுறை சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் பைக்கில் இன்ஜின் பவர் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் டூயல் ஓவர்ஹெட் கேம்ஷேஃப்ட்ஸ் பொருத்தப்பட்ட 4 சிலிண்டர் கொண்ட 999.8 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. இந்த ஃபியூயல் இஞ்செக்டட் இன்ஜின் அதிகபட்சமாக 199 பிஎச்பி பவரையும், 118.9 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. சுசுகி நிறுவனம் முதல்முறையாக ஜிஎஸ்எக்ஸ்-ஆர் பைக்கில், மோட்டோ ஜிபி இன்ஜின்களில் இருக்கும் ரேஸிங் வேரியபிள் வால்வு டைமிங்கை பொருத்தியுள்ளது. 170 கிலோ எடை கொண்ட இந்த பைக் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடுகிறது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 278 கி.மீ ஆகும். 2015ல் மிலன் நகரில் நடத்தப்பட்ட எக்மா மோட்டார் ஷோவில் சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடல் பைக்கில் இருந்த புதிய டிசைன் லாங்குவேஜ் இப்புதிய ஜிஎஸ்எக்ஸ்-ஆர் பைக்கில் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் புதிய டிசைனிலும், நல்ல ஏரோடைனமிக் வடிவத்திலும், அதிக இன்ஜின் ஆற்றலுடனும் வெளிவந்துள்ளது.
புதிய ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கின் முன்பக்கம் அப்சைடு டவுன் ஷோவா பிபிஎஃப் இன்வர்டெட் டெலஸ்கோபில் ஃபோர்க் மற்றும் பின்புறம் ஷோவா மோனோ ஷாக் அப்சார்பர்கள் உள்ளது. இதேபோல், ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000ஆர் பைக்கின் முன்பக்கம் ஷோவா பிபிஎஃப் இன்வர்டெட் டெலஸ்கோபில் ஃபோர்க் மற்றும் பின்புறம் ஷோவா பிஎஃப்எஃப் லைட் ஷாக் அப்சார்பர்கள் உள்ளது. இரண்டு பைக்குகளின் முன்புறத்திலும் 4 பிச்டன் கேலிபர்கள் கொண்ட 320மிமீ பிரெம்போ டிஸ்க் பிரேக்கும், பின்புறம் சிங்கில் பிஸ்டன் கொண்ட 220 மிமீ நிசின் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்எக்ஸ்-ஆர் பைக்குகளில் 6 வழி இனெர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட் (IMU) அளிக்கபட்டுள்ளது. இது ஒரு ஸ்மார்ட் தொழில்நுட்ப வசதி என்பது குறிப்பிடத்தக்கது. பைக்கின் மோஷன் ட்ராக் டிசிஎஸ் சிஸ்டம், பிரேக்கிங் சிஸ்டம், விளக்குகள் உள்ளிட்டவற்றை இந்த ஐஎம்யூ யூனிட் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துகிறது.
மேலும் இந்த பைக்கில் எல்ஈடி முகப்பு விளக்கு, பின்புற விளக்கு, பை-டைரெக்ஷனல் குயிக் ஷிஃப்டர்கள், ஷோவா பேலன் ஃபிரீ சஸ்பென்ஷன், லீன் ஏபிஎஸ், எல்ஈடி பொஸிஷன் விளக்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பைக்கின் அனைத்து விஷயங்களும் இதில் அளிக்கப்பட்டுள்ள எல்சிடி இன்ஸ்ட்ருமெண்டேஷன் கன்சோலில் காணும் வகையில் உள்ளது. புதிய சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக், மெட்டாலிக் ட்ரைடன் புளூ மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது. இதேபோல், புதிய ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 ஆர் பைக், மெட்டாலிக் ட்ரைடன் புளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது. விலை:- புதிய சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக் விலை ரூ.19 லட்சம். சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000ஆர் பைக் விலை ரூ. 22 லட்சம். (இரண்டுமே டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ஆகும்) இரண்டு பைக்குகளுமே இந்தியாவில் கம்பிளீட் பில்டு யூனிட் என்ற முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.