உலகின் பெரிய டூ-வீலர் மார்க்கெட்: சீனாவை மிஞ்சிய இந்தியா!

இந்தியாவின் Society of Indian Automobile Manufacturers (SIAM) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2016-ல் விற்பனையான டூ-வீலர்களின் அடிப்படையில், உலகின் பெரிய டூ-வீலர் மார்க்கெட் என்ற பெருமையை, சீனாவை வீழ்த்தி இந்தியா பெற்றுவிட்டது! எண்களின் அடிப்படையில் இதைச் சொல்வதென்றால்,

2016-ல் இந்தியா விற்பனை செய்த டூ-வீலர்கள் : 17.7 மில்லியன்
2016-ல் சீனா விற்பனை செய்த டூ-வீலர்கள் : 16.8 மில்லியன்


சீனாவின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?


இந்தியாவைப் போலவே, சீனாவும் டூ - வீலர்களுக்கான ஒரு மிகப்பெரிய சந்தை. ஆனால் அந்நாட்டின் 200 மாநகராட்சிகளில் டூ-வீலர்கள் அதிகாரப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்டதால்,  மொத்த டூ-வீலர் விற்பனையும் முன்பைவிடக் குறைந்துவிட்டது; கடந்த 2010-ல் சீனாவின் டூ-வீலர் விற்பனை, 27 மில்லியன் என்றளவில் இருந்தது. ஆனால் தடையின் விளைவாக, அந்த விற்பனை எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சீனா

2010-ல் சீனா விற்பனை செய்த டூ-வீலர்கள் : 27.51 மில்லியன்
2011-ல் -  27.22 மில்லியன்
2012-ல் -  26.37 மில்லியன்
2013-ல் - 25.75 மில்லியன்
2014-ல் - 26.95 மில்லியன்
2015-ல் - 24.56 மில்லியன்
2016-ல் சீனா விற்பனை செய்த டூ-வீலர்கள் : 16.80 மில்லியன்

இறக்குமதிக்கு அதிக விதிகள் - எந்த அதிரடியும் இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை - மக்களிடையே டூவீலர் டிரெண்டில் மாற்றம் இல்லாதது போன்றவையும், சீனாவின் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. மேலும் நகர்ப்புறங்களில் அதிக சிசிதிறன் கொண்ட டூ-வீலர்கள் நுழைவதற்கும் தடை உள்ளது; முக்கியமான விஷயம் என்னவென்றால், சீனாவில் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும் கார்களும் - எலெக்ட்ரிக் வாகனங்களும், டூ-வீலர் விற்பனைக்கு பாதகமாகவே இருந்து வருகின்றன.

இந்தியாவின் வளர்ச்சி எப்படி?

சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா, கடந்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட்ஃபோன் போல டூ-வீலர் விற்பனையும், அட்டகாசமான முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறது. 2011-2012 நிதியாண்டில், 13 மில்லியன் டூ-வீலர்கள் விற்பனையாகின; இதுவே 2014 - 2015-ல், 16 மில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தற்போது 2016-2017-ல், விற்பனை எண்ணிக்கை 18 மில்லியனை நெருங்கிவிட்டது!



இந்தியா



2011-2012ல் இந்தியா விற்பனை செய்த டூ-வீலர்கள் : 13.40 மில்லியன்
2012-2013ல் - 13.80 மில்லியன்
2013-2014ல் - 14.80 மில்லியன்
2014-2015ல் - 15.97 மில்லியன்
2015-2016ல் - 16.45 மில்லியன்
2016-2017ல் - 17.67 மில்லியன்

இந்தியா விற்பனை செய்த 17.7 மில்லியன் டூ-வீலர்களில் சுமார் 6.5 மில்லியன், கம்யூட்டர் டூ-வீலர்கள் எனப்படும் 100-110சிசி மோட்டார் சைக்கிள்கள்; மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 5.2 மில்லியன், ஸ்கூட்டர்கள் மட்டுமே என்பது, இந்தியாவில் என்ன டிரெண்ட் என்பதை உணர்த்திவிடுகிறது. சீனாவைப் போல, இந்தியாவில் டூ-வீலர்கள் மீது எவ்விதமான தடைகளும் இல்லாதது கவனிக்கத்தக்கது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad