“அனுராக் காஷ்யப் பத்தி ஒரு விஷயம்... நயன்தாரா பத்தி ஒரு விஷயம்!” - அதர்வா
நடிகர் அதர்வாவின் கரியரில் 2017-ம் ஆண்டு, மிக முக்கியமான ஆண்டாக இருக்கும். 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', 'செம போத ஆகாத', 'இமைக்கா நொடிகள்', 'ஒத்தைக்கு ஒத்த', இன்னும் சில படங்கள் என ஜெட் வேகத்தில் பறக்கிறார்.
“பல படங்கள் நடிச்சுக்கிட்டிருக்கீங்க, கமிட்டும் ஆகியிருக்கீங்க. ‘2017’ அப்படி என்ன ஸ்பெஷல்?”
“எதுவுமே ப்ளான் பண்ணிப் பண்ணலை. வருஷத்துக்கு ஒரு படம் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இப்போ நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் எல்லாமே ஏற்கெனவே பேசினது. 2017-ல வரிசையா வந்து நின்னிடுச்சு. இப்படி நடிக்கணும், அப்படி நடிக்கணும்னு எந்த செட்டப்பும் நான் பண்ணிக்கலை. பிடிச்ச படங்களைப் பண்றேன். ஒரே மாதிரி தொடர்ந்து ரெண்டு படங்கள் பண்ணிட்டா, எனக்கு போரடிச்சுடும். ஒரு நடிகன், தன்னை பீக்ல வெச்சுக்க, நிறையவே மெனக்கெடணும். அதுக்கு நான் தயாரா இருக்கேன். ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’னு இப்போ நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் எல்லாமே எனக்குப் பிடிச்ச படங்கள்.’’
அதர்வா
“ ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ன மாதிரியான படம்?”
“எனக்கு ரொம்ப நாளா ரொமான்டிக் ப்ளஸ் காமெடிப் படம் ஒண்ணு பண்ணணும்னு ஆசை. பல நாள் கதை கேட்கணும்னு நினைச்சு, ஒருநாள் முடிவா கேட்டேன். இயக்குநர் ஓடம். இளவரசு கதை சொல்ல ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷமே, `இந்தப் படத்தை நாம மிஸ் பண்ணிடக் கூடாது'னு தோணுச்சு. படம் பண்ணிட்டேன். இந்தப் படம் ஜாலி ட்ரீட்மென்ட்டா இருக்கும்.’’
“ 'இமைக்கா நொடிகள்' படத்துல நயன்தாராவோடு நடிச்ச அனுபவம் பற்றி..."
“ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து நயன்தாரா நடிப்பைப் பார்த்துக்கிட்டிருக்கேன். அவங்க நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனியாவே ஒரு படத்தைச் சுமக்குறப் பக்குவத்துக்கு அவங்க வந்துட்டாங்க. அவங்க என் படத்துல நடிச்சது ரொம்ப சந்தோஷம். ‘இமைக்கா நொடிகள்’ படத்துல வரும் அந்த கேரக்டருக்கு, அவங்களைத் தவிர வேற யாரையும் பொருத்திப் பார்க்க முடியாது. அப்படி ஒரு போல்டான கேரக்டர்"
“அனுராக் காஷ்யப் பத்தி ஒரு விஷயம்... நயன்தாரா பத்தி ஒரு விஷயம் சொல்லுங்களேன்!”
“அனுராக் காஷ்யப், நயன்தாரா ரெண்டு பேருமே பெரிய நட்சத்திரங்கள். அவங்ககூட நடிக்கும்போது நிறைய கத்துக்க முடியுது. இதுதான் இப்போதைக்கு ஒரே விஷயம்!”
“கடந்த சில வருடங்கள்ல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லாம் விதவிதமான சவால்களைச் சந்திக்கிறாங்க. இந்தச் சூழல்ல நடிகர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?”
“சவால்கள் நிறைய இருக்கு. சமீபத்துல நல்லா ஓடின படங்களை எடுத்துக்கிட்டா, அதுல 80 சதவிகித வெற்றி ஒட்டுமொத்த டீமோட வெற்றியா இருக்கும். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகள் எல்லோருமே டெடிகேட்டா வொர்க் பண்ணும்போது, அது நல்ல சினிமாவா வெளிவரும். அதே சமயம், சினிமா பிசினஸ் பெரும் சவாலா இருக்கு. ஏன்னா, தியேட்டர்களுக்குப் போட்டியா அமேஸான், நெட்ஃபிலிக்ஸ்னு ஏராளமான நிறுவனங்கள் களமிறங்கிடுச்சு. ஸோ, தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, சினிமாவுல இருக்கிற எல்லோருமே அப்டேட்டா இருக்கவேண்டிய கட்டாயம் வந்துடுச்சு. முன்னாடியே சொன்ன மாதிரி, இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னுதான் நானும் தயாரிப்பாளர் ஆகியிருக்கேன்.
இன்னிக்குப் பல தயாரிப்பாளர்கள் பிசினஸ் விஷயத்துல அப்டேட்டா இருக்கிறதுனால்தான் ஜெயிக்க முடியுது. இயக்குநர்களுக்கும் அதே மாதிரிதான். பல வருஷங்களா உதவி இயக்குநரா இருந்துதான் சினிமா எடுக்கணும்னு அவசியம் இன்னிக்கு இல்லை. திட்டம், பார்வை, செயல்முறை… இந்த மூணும் இருந்தாலே இயக்குநரா ஜெயிக்கலாம். ‘மாநகரம்’, ‘8 தோட்டாக்கள்’ படங்கள் எல்லாம் இந்தக் கேள்விக்கு சிறந்த உதாரணங்கள்.
நடிகருக்கான சவால்கள்னு பார்த்தா, தமிழ் சினிமாவைத் தாங்கவேண்டிய கட்டாயம் இருக்கு. ஒரே ஃபார்முலா, ஒரே வகையான படங்கள்னு பண்ணா, ஆடியன்ஸுக்கு போரடிக்கும். இப்படி நடிகர்களுக்கான சவால்கள் ரொம்ப அதிகம். ஆக, நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிச்சா, ஹிட் ஹீரோ ஆகலாம்!”
அதர்வா
“சக நடிகர்கள், நடிப்பைத் தாண்டி, சங்க நிகழ்வுகள், சங்கத் தேர்தல்கள்னு பிஸியா இருக்காங்க. உங்களை அந்தக் கூட்டத்துல பார்க்க முடியலையே?”
“அப்படி இல்லைங்க. விஷால் சாரோடு நல்ல நட்புலதான் இருக்கேன். நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சமயங்கள்ல எல்லாம் நான் என்ன பண்ணணுமோ, அதைச் சரியா பண்ணிக்கிட்டிருக்கேன்!”
“சினிமாவுல இதுவரை கத்துக்கிட்டதை ஒரு வரியில் சொல்லுங்க?”
“ஆடியன்ஸ் டாக்டரா இருக்காங்க; நான் பேஷன்ட்டா இருக்கேன்.''