முத்தக் காட்சிகளே இல்லை!
சரண்ராஜ் மகன் ஏக்கம்
“உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?”
“சினிமாவுக்கு வரணும் என்ற ஆர்வம் இல்லாமல் இருந்தேன். ஏர்ஃபோர்ஸ், மிலிட்டரி அப்படின்னு போயிடணும் என்றுதான் நினைத்தேன். அப்பாவுக்கு கிடைக்கும் பேர், புகழ், சமுதாய அந்தஸ்தை பார்க்க பார்க்க எனக்கும் சினிமாவில் நடிக்கணும் என்ற ஆர்வம் பிறந்தது. ரஜினி, கமல், தனுஷ் ஆகியோரும் கூட என்னுடைய இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம்.”“வாரிசு என்ற அடையாளம்தான் உங்களை ஹீரோவாக்கியதா?”
“அப்படி சொல்ல முடியாது. அப்பாவுக்கு பேக்ரவுண்ட் இருக்கு என்பதை மறுக்கலை. என்னுடய நண்பர்களேகூட, ‘உனக்கென்னடா உங்க அப்பா இருக்கிறார்!’னு சொல்வாங்க. ஒரு கட்டத்தில் சரண்ராஜ் மகன் என்பது பாதகமா அமைந்தது.
நிறைய டைரக்டர்ஸ் அப்ரோச் பண்ணாங்க. ஆனால் தயாரிப்பாளர் இல்லாமல் வந்தாங்க. இவ்வளவுக்கும் நாங்கள் தயாரிக்கிறோம் என்று எந்த அறிவிப்பும் கொடுக்கலை. ஆனால் சரண்ராஜ் படம் தயாரிக்கிறார் என்ற டாக் பரவிடுச்சி. அப்படியே முணு வருடம் போராடி இருப்போம். அதன் பிறகுதான் ஆறுபடை மூவி மேக்கர்ஸ் ஆறுபடையப்பன் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.”
“கதை?”
“அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன். அதேபோல் தன் மகனைவிட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்ற நினைப்பில் வாழும் அம்மா. இவர்களுடைய வாழ்க்கையில் காதலி குறுக்கே வருகிறாள்.
அதை அந்த குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது என்பதும், தன் மகள் தான் தனது ஆதாரம் என்று வாழும் அப்பா, தன் அப்பாவை விட உலகத்தில் உயர்ந்தது எதுவும் இல்லை என்று வாழும் மகள், இவர்களுக்கு இடையே காதலனாக நாயகன் உள்ளே வர அதை அந்த குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது என்பதும்தான் இந்தப் படத்தின் கதை.”
“உங்கள் அப்பா நினைத்திருந்தால் உங்களை ஆக்ஷன் ஹீரோவா களமிறக்கியிருக்கலாமே?”
“உண்மைதான். என்னுடைய ஆசையும் அதுதான். முதல் படத்தை பிரம்மாண்டமா கொடுக்கலாம் என்று அப்பாவிடம் சொன்னேன். ஆனால் அப்பா, ‘முதலில் நீ நல்ல நடிகன்னு புரூவ் பண்ணு. அப்புறம் நீ நினைக்கிற மாதிரி ஆக்ஷன் படங்களை பண்ணலாம்’ என்றார். அதுக்காகவே என்னிடம் கதை சொல்பவர்களிடம் அப்பா ஒரு நிபந்தனை வைத்தார்.
‘எந்தக் காரணத்தைக் கொண்டும் என் பையன்தான் ஹீரோன்னு கதை சொல்லாதீங்க. என் பையனுடைய முதல் படத்தில் கதை தான் ஹீரோவா இருக்கணும்’ என்பார். அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநர் லிங்கன்ராஜாளி ஸ்டெப் பை ஸ்டெப் மெனக்கெடல் போட்டிருக்கிறார்.”
“உங்களுக்கு என்ன கேரக்டர்?”
“வெகுத்தளிமான கேரக்டர். எப்பவும் அம்மா கூடவே இருப்பான். வாலிபப் பையனா இருந்தாலும் சின்ன பையனுக்குரிய சேட்டை பண்ணுவான். உடனே ‘சின்னதம்பி’ பிரபு கேரக்டர் போல் இருக்குமான்னு நினைக்க வேண்டாம். இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.”“சினிமாவுக்காக என்ன பயிற்சி எடுத்தீர்கள்?”
“விஸ்காம் முடித்ததும் சினிமாவுக்கு ட்ரை பண்ணலாம் என்று முடிவு பண்ணினேன். சினிமாவைப் பற்றி எல்லா நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்று அசிஸ்டென்ட் டைரக்டரா சேரணும்னு ஆசைப்பட்டேன். இயக்குநர் லிங்குசாமி சாரை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர், ‘எதுக்கு அசிஸ்டென்ட் டைரக்டரா வர்ற? ஒரு நடிகனுக்குரிய எல்லா திறமைகளும் உன்னிடம் இருக்கு. நடிக்க ட்ரை பண்ணு’னு சொன்னார்.
அதன் பிறகு மறைந்த பாலுமகேந்திரா சாரிடம் சினிமா பட்டறை என்ற வகுப்பில் நடிப்பு கற்றேன். பவர் பாண்டியன் மாஸ்டரிடம் பைட், தர் மாஸ்டரிடம் நடனம்னு சினிமாவுக்கான பயிற்சிகளை முழுசா எடுத்துக்கிட்ட பிறகுதான் கேமரா முன்னாடி நின்றேன்.”
“ஹீரோயினைப் பற்றி சொல்லவேயில்லையே?”
“நான் மறந்தாலும் நீங்க விட்ருவீங்களா? ஷிவானி என்ற கேரளா பொண்ணு பண்றாங்க. அவங்களுக்கும் இதுதான் முதல் படம். படத்துல ரொமான்டிக் சீன்ஸ் கம்மி என்பதால் முத்தக் காட்சிகளுக்கோ, நெருக்கமான காட்சிகளுக்கோ வாய்ப்பே இல்லை. சிம்பிள் லவ்வை அழகாகக் காட்டும் படம் இது.” “ரஜினி சந்திப்பு எப்படி இருந்தது?”
“சின்ன வயசிலே ரஜினி சாரை மீட் பண்ணியிருக்கிறேன். இந்தப் படத்துக்காக அப்பா, ‘ஒரு அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா?’ என்று ரஜினி சாரின் மேனேஜரிடம் கேட்டிருந்தார். ‘எதுக்குடா அப்பாயின்ட்மென்ட்? நேரா வீட்டுக்கு வரவேண்டியதுதானே?’ என்று ரஜினி சார் கேட்டார். அவருடன் இருந்த நொடிப் பொழுதுகள் மறக்க முடியாதவை. சூப்பர் ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் எளிமையா பழகினார். படம் வெற்றி பெற மனசார வாழ்த்தினார்.”
“உங்க நடிப்பு பற்றி அப்பா என்ன சொல்கிறார்?”
“சின்ன வயதிலிருந்தே அப்பாவிடம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஏன்னா, அப்பா பிஸியாக இருந்ததால் அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கம்மியாக இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல அப்பா வரும்போது கூட நெர்வஸாகி விடுவேன். ஒரு கட்டத்தில் அப்பா ஸ்பாட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். அதுக்கப்புறம்தான் என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது. நான் நடித்த காட்சிகளைப் பார்த்துவிட்டு சந்தோஷப்பட்டார்.”