இந்தியாவின் கவுரவம்! - நடிகர் ராணா பேட்டி
‘பாகுபலி' படத்தில் பல்லாளத்தேவன் என்ற கதாபாத்திரத்தில், ஆக்ரோஷமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ராணா. “ஒட்டுமொத்த தேசத்துக்காக ஒரு படம் எடுக்கும்போது அது எந்த மொழியில் எடுக்கப்பட்ட படத்தை விடவும் மிகப்பெரியதாக இருக்கும் என்பதை `பாகுபலி’ நிரூபித்துள்ளது. ஒரு சூப்பர் ஹீரோ படம் எடுக்கலாம் என்று யோசித்தால் அதற்கான நம்பிக்கையை ‘பாகுபலி’ தந்துள்ளது.” என்று `பாகுபலி 2' குறித்து பெருமிதம் பொங்கப் பேசத் தொடங்கினார் ராணா.
உங்களை கர்வமாக உணரவைக்கிறதா பாகுபலி 2?
450 கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட ஒரு படத்தில் நடிக்கும்போது நீங்கள் நடிக்கும் பாத்திரம் கண்டிப்பாக அதிக ரசிகர்களிடம் சென்றடையும். தேசத்திலேயே மிகப் பெரிய படம் இது. இதில் நான் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இதே போன்ற புகழ் எனக்குக் கிடைத்திருக்கும். நான் நடித்திருப்பதிலேயே மிகப் பிரம்மாண்டமான படம் இதுதான்.
சிறப்பான நடிகர்கள், திறமையான இயக்குநருடன் பணியாற்றியதில் ஒரு கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொண்டு நடிப்பதில் தேர்ந்திருக்கிறேன். இந்த இரண்டு பாகங்களில் நான் கற்றது கண்டிப்பாக அடுத்து நான் நடிக்கும் படங்களில் எதிரொலிக்கும்.
பாகுபலி முதல் பாகத்தின் வெற்றி என்ன கற்றுத் தந்தது?
முதல் பாகத்தில் நடந்த விஷயங்களின் தொடர்ச்சி தான் இரண்டாம் பாகம். ஆனால் முதல் பாகத்தை எடுக்கும்போது அது இவ்வளவு பெரிய உயரங்களைத் தொடும் என நாங்கள் நினைக்கவில்லை. பாகுபலி இந்திய சினிமாவின் கவுரவம். ஆனால் இப்போது சர்வதேச அளவில் படத்துக்குத் தனியாக ஒரு அடையாளம் கிடைத்துள்ளதால் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுக்கும் நம்பிக்கையை அது தந்தது. முதல் பாகத்தை விட அத்தனை அம்சங்களில் பிரம்மாண்டமாக இரண்டாம் பாகம் இருக்கும்.
முதல் பாகம் தான் எங்களின் முதல் சரித்திரப் போர்க் கதை. முதல் முயற்சி அது. அப்போது அனைத்தும் புதிதாக இருந்தன. கிராஃபிக்ஸ் பணிகளுக்குப் பிறகு படம் எப்படி இருக்கும் என்றுகூட எங்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது. இரண்டாம் பாகப் படப்பிடிப்பு கடினமாக இருந்தாலும், முதல் பாகத்தில் செய்த பல தவறுகளை இதில் செய்யவில்லை. அதிக பட்ஜெட்டும் இருந்தது