மும்முனை மின்சாரம் கேள்விக்குறி: கோடை சாகுபடியும் கைவிரிப்பு தமிழக விவசாயிகள் அதிர்ச்சி
தினமும் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல், டெல்டா உள்பட தமிழகம் முழுவதும் விவசாயிகள் கோடை சாகுபடி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் 140 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்டு–்ள்ள கடும் வறட்சியால் ஒட்டுமொத்த விவசாயிகளும் நிலைகுலைந்தனர். வட கிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழை கைகொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காவிரிக்கு இயற்கையும், கர்நாடகாவும் கைகோர்த்து போட்ட தடையால் டெல்டா மாவட்ட வயல்கள் பல மாதங்களாக சாகுபடி செய்யப்படாமல் வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கின்றன.
கடந்த ஆண்டு ஒரு போக சாகுபடியாக விளைவிக்கப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும், மனவேதனையாலும் உயிரிழந்தனர். கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பிறகும் விவசாயிகளுக்கான உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய தமிழக அரசு நிலையில்லாத சூழ்நிலையில் தத்தளித்து கொண்டிருப்பதும், முடிவுகளை அமல்படு–்த்த முடியாமல் தவிப்பதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க 84 விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் அளித்த தமிழக அரசு வறட்சியால் தமிழகத்தில் எந்த விவசாயியும் சாகவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அறிவித்த அரசு, பெயரளவுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கி உள்ளது. அதிலும் பல கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை. மத்திய அரசு வழங்கிய நிவாரண உதவியை இரண்டாம் கட்ட இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பம்புசெட் உதவியுடன் இந்த ஆண்டு கோடை சாகுபடியை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் டெல்டா உள்பட தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாகுபடி தொடங்கியுள்ளனர். பெரும்பாலான விளை நிலங்களில் பருத்தி, உளுந்து போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கும் வேட்டு வைக்கும் வகையில் சில நாட்களாக மும்முனை மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.
பகலில் 2 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மட்டுமே மும்முனை மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் எப்போது வரும் என்று தெரியாததால் விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான மின் பற்றாக்குறையால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பகலில் 8 மணி நேரமும் இரவில் 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் அளித்தால் மட்டுமே பயிரை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் கண்ணீருடன் கூறுகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், தினமும் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் தினமும் 16 மணி நேரம் மின்சாரம் தருவதாக அரசு அறிவித்துள்ளது. மின்வாாிய அதிகாரிகளிடம் கேட்டால் தினமும் 12 மணி நேரம் மின்சாரம் தருவதாக கூறுகின்றனர். தினமும் 3 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே சந்தேகமாக உள்ளது. இந்த 3 மணி நேர மின்சாரத்தை வைத்து எப்படி சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும்? தமிழக அரசு மும்முனை மின்சாரத்தை வழங்காததால் கோடை சாகுபடியை ெசய்ய முடியாத நிைல ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி போலவே பருத்தி போன்ற மாற்றுப்பயிர்களும் உரிய முறையில் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது’ என்கின்றனர்.
விவசாயி தற்கொலை முயற்சி
கும்பகோணம் கடிச்சம்பாடியை சேர்ந்தவர் ரங்கசாமி(70). இவரது மனைவி அம்சா. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணமாகிவிட்டது. ரங்கசாமி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கோடை நெல் சாகுபடி செய்திருந்தார். இதற்காக கூட்டுறவு வங்கியில் ரூ.30ஆயிரமும், தேசிய வங்கியில் நகைகடனும், வட்டிக்கும் கடன் வாங்கியிருந்தார். தற்போது தொடர் மின்தடையால் மும்முனை மின்சாரம் கிடைக்காததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
பயிர்கள் கருகியதால் மனமுடைந்த ரங்கசாமி கடனை திருப்பி செலுத்தமுடியாமல் போய்விடுமோ என்ற வேதனையில் இருந்தார். நேற்று காலை வயலுக்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.