பெண்களின் எலும்பு உறுதிக்கு வெங்காயம்.!
பெண்களுக்கு வரும் எலும்பு மெலிவு நோயான ஆஸ்டியோ போரோஸிசைக் குணமாக்கும் அரிய உணவு எது? வெங்காயம்தான்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் பல்கலைக்கழகம் இடுப்பு எலும்பு மெலிவு, எலும்பு முறிவு நோயையும், எளிதில் உடையக்கூடிய எலும்பு மெலிவு நோய்களையும் நன்கு குணமாக்கவல்லது இந்த வெங்காயம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
பெர்ன் பல்கலைக் கழகத்தினர் நான்கு வாரங்கள் எலிகளுக்கு உணவாக வெங்காயத்தைக் கொடுத்து வந்தனர். ஆய்வில் இந்த எலிகளின் எலும்புகள் கனமாகவும் உறுதியாகவும் மாறி இருந்தன. பார்ஸ்லே, லெட்டூஸ், தக்காளி, வெள்ளரி, பூண்டு, மஞ்சள் நிறமான டில் போன்றவையும் எலும்புகளை உறுதியாக்க வல்லவை. ஆனால், வெங்காயத்தை ஒப்பிடும்போது இவையெல்லாம் சாதாரணமானவை.
எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்திச் சிபாரிசு செய்யப்படும் பாலும், சோயாவும் எலிகளின் எலும்புகளில் மிகச் சிறிய அளவில்தான் பயனை விளைவித்தன.
”எலும்பு மண்டலத்தின் வளர்ச்சி மாற்றத்தில் எல்லாக் காய்கறிகளும் எந்த அளவு பயன் தருகின்றன என்று ஆராய்ந்தோம். எலிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் மனித உடலிலும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்த வல்லவை என்பது தெரிய வந்தது. எலும்பு மெலிவு நோயைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான, கனமான, உறுதியான எலும்புகளை உடல் பெற்றிட மிகமிகச் சிறப்பான, இதைச் சரியாகவும், குறைந்த செலவிலும் குணப்படுத்தும் வெங்காயத்தையே பெண்களும் ஆண்களும் சேர்த்து வந்தால் போதும்” என்கிறார் இந்த ஆய்வுக் குழுவின் பொறுப்பாளரான டாக்டர் ரோமன் முகல்பெனர், ‘நேச்சர்’ பத்திரிகை பேட்டியில்.
”எலும்பு மெலிவைத் தடுக்கும் முக்கியமான கூட்டுப் பொருள் வெங்காயத்தில் இருக்கிறது. அது, ‘இந்தப் பொருள்தான்’ என்று சரியாகக் கூறமுடியவில்லை. மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவு முறையில் ஆரோக்கியத்தைப் பெருக்கும் சொத்து, தினமும் வெங்காயம் சாப்பிடுவதே என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஆலிவ் ஆயில், பூண்டு, மீன், சிவப்பு நிற லெட்டூஸ், முட்டைக்கோசு இவற்றுடன் வெங்காயத்தை பச்சையாக நன்கு சேர்த்துக் கொள்கின்றனர்” என்கிறார் டாக்டர் ரோமன்.
எல்லா வகையான வெங்காயங்களிலும் சல்ஃபர் உப்பு வகைகள் உள்ளன. இவைதாம் இரத்தம் கட்டிப்படாமல பார்த்து கொள்கின்றன. சிவப்பு நிற வெங்காயத்தில் குயிர்சிட்டின் என்ற பொருள் இருக்கிறது. இது உடலில் வீக்கம், அலர்ஜி ஏற்படாமலும் மாரடைப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது. சிறிய வெங்காயங்களில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்புச் சத்து பொட்டாசியம், பீட்டா காரட்டின் போன்றவை உள்ளன. இவை இளமை, கண்பார்வை, இரத்த விருத்தி முதலியவற்றைப் பாதுகாப்பத்தில் சிறப்பான பணியைச் செய்கினறனவாம்.