உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன மாநில தேர்தல் ஆணையர் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறினார்.
திருச்சி
திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்ட அதிகாரிகளுடன் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆய்வுக்கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கினார்.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் நிருபர்களிடம் கூறியதாவது:–
90 சதவீதம் முடிந்தது
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அடிப்படை பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும். கடந்தமுறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் மனுதாக்கல் செய்த வேட்பாளரின் முன்வைப்புத் தொகை குறைவானது என்பதால் அவர்களுக்கு தகவல் தெரிவித்து திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பாதுகாப்பு அறையில் தேர்தல் தொடர்பான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதையும் மாநில தேர்தல் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.