தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை: இடி, மின்னல் தாக்கி 7 பேர் பலி
சென்னை: சுட்டெரித்து வந்த அக்னி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மின்னல் தாக்கியுள்ளதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோடை காலம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் வெளியே நடக்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் வெப்பத்தின் தாக்கதை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தனிந்ததில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேரூரை அடுத்த செத்துப்பட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. கீழ்பெண்ணத்தூரை அடுத்த கீக்கலூர் கிராமத்தில் இடி தாக்கியதில் மூதாட்டி வள்ளி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளி்லும் பரவலாக மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சங்கர்ராஜ் என்ற மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
இதே போல் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி, எளியார்பட்டி, காலான்பட்டி கிராமங்களில் மின்னல் வெட்டி தாக்கியதில் 10 வயது சிறுவன் உட்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேயிலை உற்பத்தி அதிகரித்திருப்பது விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இதேபோல் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.