33 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கடற்கரை, ஒரே இரவில் திரும்பிய அதிசயம்..!

கடற்கரை


அச்சீல் தீவுகள். அயர்லாந்து நாட்டில் இருக்கும் அமைதியான தீவுகள். 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இன்னமும் தன்னைத் தொலைத்துவிடாமல், இயற்கையோடு இணைந்தே இருக்கும் நகரம். இந்தப் பகுதியின் மொத்த மக்கள் தொகையே 3000க்குள் தான். ஆனால், சுற்றுலாவாசிகள் பலர் வந்துபோகும் ஓர் அழகிய பிரதேசம்.

அச்சீலீஸ் தீவுகள் அமைதிக்காகவும், இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கும் பெயர் போனது. இங்கிருக்கும் deserted village என்ற பகுதி புகழ்பெற்றது. 80க்கும் மேற்பட்ட வீடுகள் இன்னமும் இங்கு இருக்கின்றன. எந்த சிமெண்ட்டும் இல்லாமல், வெறும் கற்களாக கட்டப்பட்ட வீடுகள் அவை. ஆனால், எல்லா இயற்கை சீற்றங்களையும் தாங்கிக்கொண்டு இன்னமும் வீடுகள் நிற்கின்றன. இப்போது இங்கே ஒருவர் கூட வாழாததால் இதற்கு deserted village என்ற பெயர் வந்திருக்கிறது.

1900களில் இங்கு 5000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், திடீர் திடீர் என மாறும் காலநிலையால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இடம்பெயர்ந்துவிட்டார்கள். இயற்கை, அச்சீல் தீவுக்கு வரமும் சாபமும் மாறி மாறி தரும். அப்படி ஒரு சாபத்தைத்தான் 1984-ம் ஆண்டு தந்தது.



Dooagh என்னும் ஒரு கிராமம் இங்கே உண்டு. அந்த கிரமாத்துக்கு 1984-ம் ஆண்டு வரை ஒரு கடற்கரை இருந்தது. 1984ல் அடித்த ஒரு சூறாவளியில் கடற்கரையில் இருந்த மொத்த மணற்பரப்பும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் அன்று முதல் வெறும் பாறைகளே இருந்தன. தங்களுக்கென இருந்த ஓர் அழகிய கடற்கரையும் இல்லாமல் போய்விட்டதை நினைத்து கிராமவாசிகள் கடந்த 33 ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். சுற்றுலாவாசிகளுக்கு அது இன்னொரு கடற்கரை. ஆனால், அந்தக் கிராம மக்களுக்கு பல நினைவுகளைத் தரும் ஒன்று அந்தக் கடற்கரை.

2017. சாபம் தந்த அதே இயற்கை வரம் தந்திருக்கிறது. கடந்த 10 நாட்களில் பல டன் மணல் கடற்கரையில் சேர்ந்திருக்கிறது. முன்பிருந்ததை விட அதிக மணல், 300 மீட்டர் நீளத்துக்கு ஒரு புது கடற்கரையையே உருவாக்கியிருக்கிறது. இது Dooagh கிராம மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அச்சீல் தீவுகள் கடற்கரை - இன்று

படங்கள்: swns.com / Achill Toursim



Foundation for Environmental Education என்னும் அமைப்பு கடற்கரைகளை ஆராய்ந்து, அவற்றுக்கு Blue flag ஸ்டேட்டஸ் தருவார்கள். அது அந்தப் பகுதியின் பாதிகாப்பினை உறுதி செய்து, சுற்றுலாவாசிகளுக்கு போட்டிங் போன்ற சேவைகளை கொடுக்க அனுமதிக்கும். Dooagh கிராம மக்கள் அடுத்த ஆண்டு தங்களுக்கு கிடைத்திருக்கும் புது கடற்கரைக்கு ப்ளூ ஃப்ளாக் ஸ்டேட்டஸ் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியை கொண்டு வந்திருக்கும் புதிய கடற்கரை, தங்களுக்கு பொருளாதார ரீதியான உதவியையும் செய்து கொடுக்கும் என நம்புகிறார்கள் கிராமவாசிகள்.

இயற்கையை ஒருபோதும் மனிதர்களால் வெல்ல முடியாது என்பதற்கு இன்னோர் உதாரணம் அச்சீல் தீவுகள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad