சேகர்ரெட்டியிடம் 300 கோடி கமிஷன் அமைச்சர்கள் மீது நடவடிக்கை: வருமான வரித்துறை பரிந்துரையால் எடப்பாடி அரசுக்கு புது நெருக்கடி
சென்னை: மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ரூ.300 கோடி கமிஷன் வாங்கியதாக தகவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமானவரித்துறை பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது. இதனால், எடப்பாடி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.வேலூரை சேர்ந்த மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி. தி.நகரில் வசித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தார். மேலும், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் பல கோடி மதிப்புள்ள டெண்டர்களை எடுத்து பணிகள் செய்து வந்தார்.
இதன் மூலம் கோடிக்கணக்கில் அவர் பணம் சம்பாதித்துள்ளார். அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலருக்கு நெருக்கமாக இருந்ததால் அனைத்து டெண்டர்களும் அவரது நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, சேகர் ரெட்டி தரப்பு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் கமிஷன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பிறகு தொழிலதிபர்கள் சிலரிடம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்கோடிக்கணக்கில் பரிமாற்றம் நடந்திருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், கடந்த டிசம்பர் 8ம் தேதி மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலு, பிரேம் குமார் ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரூ.147 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டுகள், 178 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ரகசிய அறையில் இருந்தன. அதில் சேகர் ரெட்டி பயன்படுத்தி வந்த முக்கிய டைரி ஒன்றும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியது. ஒரே இடத்தில் ரூ.34 கோடி புதிய ரூ.2000 நோட்டுகள் பறிமுதல் செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேகர் ரெட்டி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையிலேயே தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம் மற்றும் அவரது மகன் விக்னேஷ் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், பணம், தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும், கைப்பற்றப்பட்டது ஹவாலா பணம் என்பதால் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது சேகர் ரெட்டி வீட்டில் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளான 33 கோடியே 74 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கு எந்த ஆதாரமும் அவர் தெரிவிக்கவில்லை என்பதால் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை அமலாக்கத்துறை முடக்கியது.மேலும், வருமானவரித்துறை கைப்பற்றிய டைரியில் உள்ள குறிப்புகள்படி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் முக்கிய துறைகளில் ஒப்பந்தம் பெற்றதில் பல்ேவறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதனால் சேகர் ரெட்டி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என யார், யாருக்கு எவ்வளவு கோடி கமிஷன் கொடுத்தார் என்பது குறித்து பெயருடன் அடங்கிய விவரங்கள் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.300 கோடி வரை அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன் பெற்றதாகவும் டைரியின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் பல்வேறு அரசு துறைகளில் ஒப்பந்தம் பெறுவதற்காக ரூ.300 கோடிக்கு மேல் கமிஷன் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டைரியில் லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களையும் வருமான வரித்துறையினர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருமான வரித்துறையினர் அனுப்பிய இந்த திடீர் கடிதம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய கட்டாயமும் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பதவியை தவறாக பயன்படுத்தி சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது.வருமான வரித்துறையின் இந்த திடீர் கடிதத்தால் மீண்டும் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.