கத்திரி வெயில் தொடங்கினாலும் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
கத்திரி வெயில் தொடங்கினாலும் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன், ''கடற்கரை பகுதிகளில் காற்றின் திசை காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை குறைவாக இருக்கும். இதற்கு மாறாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரித்து காணப்படும்'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ''அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் பேச்சிப்பாறை, செங்கோட்டை ஆகிய இடங்களில் 6 செ.மீ வரை கோடை மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வறண்ட சூழ்நிலையையே நிலவும்" என்றார்.
முன்னதாக கோடை காலம் தொடங்கி தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின்போதே அதிக வெப்பம் நிலவும்.
ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவானது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குகிறது.