பாகுபலி 2 படத்தின் மாஸ் சீனுக்கு ஆதாரமாய் அமைந்த ரசிகச் சண்டை!
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் அதிகப்படியான கை தட்டல்களை அள்ளுகிற காட்சிகளில் ஒன்று, அந்த இடைவேளைக் காட்சி. அந்தக் காட்சியில், மன்னனாக பல்வாள்தேவன் முடிசூட, அமைதி காக்கும் மக்கள், கொஞ்ச நேரத்தில் மன்னர் முன் சேனாதிபதி பாகுபலியின் பெயரை கோஷமிடுவார்கள். எப்படி.. தொடர்ந்து சில நிமிடங்களுக்கு ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் தரையில் ஒலியெழுப்ப, யானைகள் பிளிற ‘பாகுபலி... பாகுபலி’ என்று கோஷம் விண்ணை முட்டும்.
இந்தக் காட்சிக்கு இன்ஸ்பயரேஷன், ஒரு நடிகரின் ரசிகர்களுக்கும், இன்னொரு நடிகருக்கும் நடந்த ஒரு சம்பவம்!
பாகுபலி 2
ஆம். இந்தப் படத்தின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் (ராஜமௌலியின் தந்தை) அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கு இன்ஸ்பிரேஷனே பவன் கல்யாண் – அல்லு அர்ஜுன் ரசிகர்களின் மோதல்தான் என்று சொல்லி இருக்கிறார். அதனால், பல்வாள்தேவன் போட்டோவை வைத்து அல்லு அர்ஜுனைக் கிண்டல் செய்து ஏகப்பட்ட மீம்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. பவன் கல்யாணுக்கும், அல்லு அர்ஜுனுக்கும், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் என்ன தொடர்பு என்பது தெரியாமல், குழம்புகிறீர்களா?
கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போகலாம் வாருங்கள்!
பவன் கல்யாண்:
ஆந்திராவின் மக்கள் சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாணின் ரசிகர்கள் எந்த சினிமா விழாவாக இருந்தாலும், அதில் “பவர் ஸ்டார்” பவன் கல்யாணின் பெயரை மேடையில் சொல்லச் சொல்லி டார்ச்சர் செய்வார்கள். விழா நடக்கவிடாமல், ‘பவர் ஸ்டார்.. பவர் ஸ்டார்’ என்று கோஷமிடுவார்கள். வேறு வழியில்லாமல், விழா சம்பந்தப்பட்டவர்கள் மேடையில் - சம்பந்தமே இல்லை என்றாலுமே கூட - ‘பவன் கல்யாண்’ என்று சொல்வார்கள். உடனே அவரது ரசிகர் படை கரகோஷமிட்டு, அதன் பின்னர் விழாவை நடக்க அனுமதிப்பார்கள். இது சமீப காலமாக அனைத்து சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களிலுமே நடந்து வருகிறது. பாலகிருஷ்ணா பட விழாக்கள் விதி விலக்கு. காரணம் உங்களுக்கே தெரியும். அவர் டானுக்கெல்லாம் டான்.
Cheppanu Brother
அல்லு அர்ஜுன் - செப்பனு பிரதர்:
அப்படித்தான் சென்ற ஆண்டு நடந்த ‘சரைனோடு’ பட விழாவிலும் நடந்தது. படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன். இவர் பவன் கல்யாணுக்குமே உறவினர்தான். அர்ஜுனின் அத்தைதான் பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மனைவி. வழக்கம்போல அல்லு அர்ஜுன் மேடையில் வந்த உடனே, பவன் கல்யாண் ரசிகர்கள் “பவர் ஸ்டார், பவர் ஸ்டார்” என்று கோஷமிட ஆரம்பித்தனர். எப்போது இந்த முழக்கங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் மேடையில் இருப்பவர்கள் உடனடியாக “பவன் கல்யாண்” என்று சொல்லியாக வேண்டும் அல்லவா.. அதுதானே அங்கு வழக்கம்?
ஆனால், ரசிகர்களின் இந்த ரவுடித்தனத்தால் கடுப்பான அல்லு அர்ஜுன், மேடையில் இரண்டு வார்த்தைகளைச் சொன்னார்: “செப்பனு, பிரதர்”. (சொல்லமாட்டேன், சகோதரா). அவ்வளவுதான். அந்த விழா மேடையில் ஒரு பதற்றம் ஏற்பட்டது. ரசிகர்கள் தொடர்ந்து கோஷமிட, அல்லு அர்ஜுனும் விடாப்பிடியாக நின்று, அந்த கூச்சல்கள் அடங்கும்வரை பொறுத்திருந்து, அதன் பின்னர் பேசி முடித்தார். தெலுங்கு படவுலகில் பல நாட்கள் இதுதான் விவாதப் பொருளாகவே இருந்தது. Cheppanu Brother என்று யூ ட்யூபில் போட்டாலே பல வீடியோக்கள் இது சம்பந்தமாக வந்து கொட்டும். பவன் கல்யாணின் முரட்டு ரசிகர்களுக்கு ஒருவழியாக கடிவாளம் கட்டிய முதல் ஹீரோ என்று சினிமா உலகம் அல்லு அர்ஜுனைப் புகழ்ந்தாலும், பவன் கல்யாண் ரசிகர்கள் அப்போது முதலே அல்லு அர்ஜுனைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த விஷயம் எந்த அளவிற்கு பாப்புலர் ஆகி விட்டது என்றால், தெலுகு நடிகரான அல்லரி நரேஷின் “செல்ஃப்பி ராஜு” படத்தில், காமெடி நடிகர் பிருத்வி, இதே வசனத்தைச் சொல்வார் (செப்பனு பிரதர்). அந்த ட்ரைலர், வைரலாக பரவி ஹிட்ஸ்களை அள்ளியது. அதற்கும் ஒரு சில சிக்கல்கள் பிரச்சனைகள் உருவாக, அல்லரி நரேஷ் தனியாக ஒரு பேட்டி கொடுத்து, பவன் கல்யாண் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகிய இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். யாரையும் நான் கிண்டல் செய்யவில்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியது தனி கதை.
பாகுபலி 2:
இவர்களுக்கிடையேயான அரசியல் இப்படி இருக்க, பாகுபலி படத்தின் கதாசிரியர், படத்தின் இடைவேளைக் காட்சிக்கு ’அந்த ரசிகர்களின் முழக்கம், அதனால் அல்லு அர்ஜுன் கடுப்பான விஷயம் இவற்றை மனதில் வைத்துத்தான் எழுதினேன்’ என்று ஒரு பேட்டியில் சொல்லிவிட்டார்!
ஆக,
நிஜத்தில் பவன் கல்யாண் ரசிகர்கள், அல்லு அர்ஜுன் மேடையில் இருக்க ‘பவர் ஸ்டார்.. பவர் ஸ்டார்’ என்று கத்திகூச்சல் போட்டது போல, அரசனாக பல்வாள்தேவன் வீற்றிருக்க ‘பாகுபலி பாகுபலி’ என்று மக்களும், படையினரும் கூச்சல் போடுவார்கள் என்று அர்த்தம் ஆகிறதா?
உடனே பவன் கல்யாணின் முரட்டு ரசிகர்கள் மீம்களாக அள்ளி விட்டுவருகின்றனர். பாகுபலி = பவன் கல்யாண். பல்வாள் தேவன் = அல்லு அர்ஜூன். உங்களுக்கு தெலுங்கு நண்பர்கள் இருந்தால், அவர்களது முகநூல் டைம்லைனில் சென்று பாருங்கள். ஏகபட்ட மீம்கள். எல்லாமே பல்வாள்தேவனையும் அல்லு அர்ஜுனையும் வைத்து தயாரிக்கப்பட்டவையே.