”இனி ஜேம்ஸ் கேமரூனை ஹாலிவுட் ராஜமௌலினு சொல்வாங்க!” - பாகுபலி 2 அப்டேட்ஸ்
பட ரிலீஸுக்கு முன்பு ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடத்துவதை சமீபமாக தொடர்ந்து வருகிறது டோலிவுட். அந்த வரிசையில் நேற்று மாலை பாகுபலி 2 படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டை நடத்தியிருக்கிறார்கள். அதிலேயே படத்தின் தெலுங்கு வெர்ஷன் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வீடியோ க்ளிப்பிங் போட்டு 360 டிகிரியில் யூட்யூப் மூலம் ஒளிப்பரப்பான அந்த நிகழ்வின் சுவாரஸ்யத் துளிகள் இதோ!
பாகுபலி 2
கதாசிரியர் - விஜயேந்திர பிரசாத்:
இவ்வளவு பெரிய பண்டிகையைப் பார்க்கும் போது ஐந்து வருடம் பின்னால் சென்று பார்க்கத் தோன்றுகிறது. அதில் சில தருணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஐந்து வருடம் முன்பு, ராஜமௌலி வந்து, 'அது ராஜாக்களுடைய கதையா இருக்கணும்', 'பெண்களுக்கு வலிமையான கதாபாத்திரம் இருக்கணும், அவங்கதான் கதைய நகர்த்தணும்'னு ரெண்டு கண்டிஷன் போட்டார். அதோடு சேர்த்து இன்னொரு கண்டிஷனும் போட்டார், நல்லவனும் - கெட்டவனுமா இருக்கும் க்ரே ஷேட் கதாபாத்திரமும் இருக்கணும்னு. அது தான் கட்டப்பா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியா சொல்லி சொல்லி சில மாதங்கள்ல அருமையான கதை தயாராகிடுச்சு. இப்போ அது படமாகியிருக்கு.
ஒளிப்பதிவாளர் - கே.கே செந்தில் குமார்:
ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் படிக்கும் போது எனக்கு நிறைய சினிமாக்கள் காமிச்சிருக்காங்க. தமிழ், பெங்காலி, பஞ்சாபி, மராத்தினு. ஆனா, தெலுங்கு சினிமா பத்தி பேசக் கூட மாட்டாங்க. ஆனா, இப்போ உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்கள் பாகுபலினு ஒரு தெலுங்கு சினிமா பற்றி பேசும் போது பெருமையா இருக்கு. அதில் நான் இருக்கறேங்கறதும் பெருமையா இருக்கு. எனக்கு ராஜமௌலியின் வளர்ச்சி அதைவிட பெரிய பெருமைய கொடுக்குது. அவர் இப்படியே போனா, டோலிவுட் ஜேம்ஸ் கேமரூன்னு சொல்லமாட்டாங்க, இனி ஜேம்ஸ் கேமரூனை ஹாலிவுட் ராஜமௌலினு சொல்லுவாங்க. அவர் முயற்சிகள் அப்படி தான் இருக்கு.
தமன்னா
கலை இயக்குநர் - சாபு சிரில்:
என்கிட்ட ராஜமௌலி வந்து ஒரு விஷுவல் காமிச்சிட்டு தான் பேசவே ஆரம்பிச்சார். அப்போ அவர் சொன்னது ஒரு அருவி வேணும், அது இப்படி இருக்கணும், இதெல்லாம் இருக்கணும்னு சொல்லி, அவர் மனசுல இருக்கறதைச் சொல்லி, அவர் தேவை என்ன-ங்கறதை எனக்குப் புரிய வெச்சிட்டார்.
ஆடைவடிவமைப்பாளர்கள் - ரமா ராஜமௌலி & பிரஷாந்தி:
“முதல் பார்ட் முழுக்க அனுஷ்காவுக்கு ஒரே சேலைய கொடுத்து ஏமாத்திட்டீங்க, இந்த முறை எத்தனை சேலைகள் கொடுத்திருக்கீங்க?” என தொகுப்பாளினி சுமா கேட்க, “நீங்க கவனிச்சீங்களானு தெரியல, முதல் பாகத்தில் அவங்க மூணு சேலை மாத்தியிருப்பாங்க. இந்த முறை கணக்கே இல்ல, ஃபுல் க்ளாமர்ல அனுஷ்காவ பார்க்கலாம்” என பதிலைப் பகிர்ந்தளித்து மேடை இறங்கினர்.
இடையில் விருந்தினராக வந்திருந்த நானியிடம் மைக்கைக் கொடுக்க, 'வீட்ல ஏதாவது விசேஷம்னா குடும்பத்தோட போவோம்ல அந்த மாதிரி நினைப்போட வந்து என்னுடைய முழுக் குடும்பத்தையும் சந்திச்சுட்டிருக்கேன்' என சிலிர்த்தார். அவரை விடாமல், “ஒருவேளை பாகுபலி நானியா இருந்தா, பல்வாள் தேவன் யார்?” எனக் கேட்டார் சுமா. "யாரோ என்னோட சைஸுக்கு ஏத்தமாதிரி ஒருத்தர்னா நல்லாயிருக்கும். இதுக்கு பதிலா நான் ஈ பார்ட் 2 எடுத்தா இன்னும் நல்லாயிருக்கும்" எனச் சொல்லி கொக்கியைப் போட்டார் நானி.
ரம்யாகிருஷ்ணன்:
இந்தப் படம் பத்தி எவ்வளவு பேசினாலும் போதாதுன்னு தான் தோணுது, அதனாலேயே என்ன பேசறதுன்னு தெரியல. ஒண்ணே ஒண்ணுதான் சொல்லத் தோணுது; அது நன்றி மட்டும் தான்.
சத்யராஜ்:
தமிழ்நாடு தவிர உலகத்தில் இருக்கும் மற்ற எல்லாருக்கும் என்ன கட்டப்பான்னு தான் தெரியும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் வலிமையானது. அதுக்கு ராஜமௌலிக்கு நன்றி சொல்லிக்கறேன்.