2018-ம் ஆண்டில் 'பாகுபலி' தொலைக்காட்சி தொடர்கள் தொடக்கம்
'பாகுபலி' படத்தின் கதாபாத்திர பின்புல கதைகளைத் தொலைக்காட்சி தொடர்களாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. 'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராஜமெளலி, "படத்தின் கதை இரண்டாம் பாகத்தோடு முடிந்துவிடும். ஆனால் 'பாகுபலி' உலகம் தொலைக்காட்சி தொடர்கள், புத்தக வடிவில் தொடரும். அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உள்ள பின்புல கதைகள் இடம்பெறும்" என்று தெரிவித்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்புல கதைகள் யாவுமே புத்தகங்களாக வெளிவரவுள்ளது.
இந்நிலையில், 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் 'பாகுபலி' படத்தின் தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பைத் தொடக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பை 'பாகுபலி' படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கிலேயே நடத்த முடிவெடுத்துள்ளார்கள். இதில் நடிக்கவிருப்பவர்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையும் படமாகவே கருதி, பிரம்மாண்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.