ரஜினியின் '2.0' திரைப்படம் 'பாகுபலி'யை விட பெரிதல்ல: ராம் கோபால் வர்மா கருத்து
ரஜினி நடிப்பில் உருவாகும் '2.0' திரைப்படம், 'பாகுபலி'யை விட பெரிதான படமல்ல என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2'.
இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்கள் பலரும் 'பாகுபலி 2' படத்துக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார். இது குறித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் 'பாகுபலி 2' படத்தின் வெற்றி கர்ஜனையிலிருந்து தப்பிக்க தங்களது காதுகளை மூடிக் கொண்டுள்ளனர். யானை போன்ற படம் வரும்போது பிற இயக்குனர்கள் நாயை போன்று குரைக்கின்றனர். ஆனால் பாகுபலி 2 டைனோசர் போன்றது. அதனால் நாய்,புலி, சிங்கம் என அனைத்தும் ஓடி மறைந்து கொண்டன. எஸ்.எஸ். ராஜமெளலி இந்திப் பட உலகின் கான்கள், ரோஷன்கள், சவுத்திரிகளை விட பெரியவர். பாகுபலியை விரும்பும் அனைத்து இந்திய மக்களும் ராஜமெளலியை போன்ற வைரத்தை கண்டறிந்தற்காக கரண் ஜோகரனின் காலைத் தொட வேண்டும்.
இனி இந்திய சினிமா பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் என்று பார்க்கப்படப் போகிறது. ராஜமெளலியின் பாகுபலி 2-வின் தாக்கத்தை கண்டு ஹிந்தி திரையுலகம் நடுங்கியுள்ளது. பாகுபலி 2 படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பாலிவுட் திரையுலகினர் முகத்தில் ராஜமெளலி அறைந்திருக்கிறார். ரஜினி நடிப்பில் உருவாகும் '2.0' திரைப்படம், 'பாகுபலி'யை விட பெரிதான படமா என்று எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
விரைவில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ள 'சர்கார் 3' மே 12ம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.