'சாமி 2' அப்டேட்: மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்
ஹரி - விக்ரம் இணையவுள்ள 'சாமி 2' படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'இருமுகன்' படத்தைத் தொடர்ந்து 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'ஸ்கெட்ச்' ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இதில் 'ஸ்கெட்ச்' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சாமி 2' படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். 'இருமுகன்' படத்தின் தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.
'சாமி 2' படத்துக்கு திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் தீவிரமாகவுள்ளார் ஹரி. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா, இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது இதர நடிகர் - நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.