15-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
வருகிற 15-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
ஊதிய ஒப்பந்தம்
இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்படும். 12-வது ஊதிய ஒப்பந்தம் 31-8-2016-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து 1-9-2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தை போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மார்ச் 7-ந்தேதி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் வராததால் போக்குவரத்து துறை செயலர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை
நிதித்துறை துணை செயலர் வெங்கடேஷ், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த மேலாண்மை இயக்குனர்கள், நிதி ஆலோசகர், தனி அலுவலர், இணை நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாக குழுவினர் மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கான 5 பேர் கொண்ட துணை குழுவினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சுமார் 1½ மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு எதுவும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
தொழிற்சங்கத்தினர் அதிருப்தி
கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்காதது தொழிற்சங்கத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேச்சுவார்த்தையில் அமைச்சர் பங்கேற்காதது கண்டனத்திற்குரியது. அமைச்சர் இல்லாமல் பேசுவது வீண் என்று நாங்கள் சொன்னோம். ஏற்கனவே வரவேண்டிய நிலுவைத் தொகை, கடன் தொகை, நிர்வாகத்தை நடத்துவதற்கு தேவையான பணம் ஆகியவற்றை அரசிடம் கேட்டோம். ரூ.500 கோடி வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.15 ஆயிரம் கோடி பாக்கி உள்ளது. உடனடியாக ரூ.7 ஆயிரம் கோடி இருந்தால் தான் பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற நிலையில் ரூ.500 கோடி வரும் என்றனர். இதில் எந்த பலனும் கிடைக்காது.
தொழிலாளர்கள் கொந்தளிப்பு
ஏற்கனவே ஓய்வூதியம் வழங்காதது உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அரசு பாக்கி அத்தனையும் தருகிற கையிருப்போடு வரவேண்டும் என்பது எங்கள் நிலை. அரசு தரப்பில் இது குறித்து எந்த பதிலும் இல்லை. பேச்சுவார்த்தையை ஒத்திவைத்து விட்டு, அமைச்சரிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என அதிகாரிகள் சென்று விட்டனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியையும் அறிவிக்கவில்லை. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் கடுமையான வருத்தத்திலும், கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
15-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்
பின்னர் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை விளக்க கூட்டம் பல்லவன் சாலையில் நேற்று மாலை நடந்தது.
இந்த கூட்டத்தில் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் லட்சுமணன், எச்.எம்.எஸ். அகில இந்திய தலைவர் ராஜாஸ்ரீதர் மற்றும் திராவிட தொழிற்சங்கம், அம்பேத்கர் தொழிலாளர் முன்னணி, பாட்டாளி தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அண்ணா தொழிற்சங்கம் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில், வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானத்தில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். தீர்மானத்தை தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் முன்மொழிந்தார். சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன் வழிமொழிந்தார்.
அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நிதி பற்றாக்குறை
தமிழக அரசுக்கு சொந்தமான 8 போக்குவரத்து கழகங்கள் 22,500 பஸ்களை இயக்கி வருகின்றன. வருவாய் குறைவு என தெரிந்தும் மக்கள் நலனுக்காக சுமார் 12 ஆயிரம் நகர பஸ்களை போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகின்றன. மிகச்சிறந்த போக்குவரத்து சேவையும், செயல்பாட்டு திறனும் இருந்தாலும், போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து நிதி பற்றாக்குறையில் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் பஸ்கள் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளன.
போக்குவரத்து கழகங்களின் நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, கூட்டுறவு நிறுவன கடன், எல்.ஐ.சி. அஞ்சலக ஆயுள் காப்பீடு போன்றவற்றிற்கு சம்பளத்தில் பிடித்தம் செய்த பணம் சுமார் 7 ஆயிரம் கோடியை சட்ட விரோதமாக செலவு செய்து விட்டன. ஓய்வு கால பலன் நிலுவை மட்டும் ரூ.1,500 கோடி.
ஏற்க முடியாது
மேற்கண்ட சூழ்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி, அது 1.9.2016 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். கடந்த 7.3.2017-ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து கழகங்களில் இயக்க வருமானத்திற்கும், இயக்க செலவிற்குமான வித்தியாச தொகையை, தற்போது போக்குவரத்து கழகங்கள் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து அதனை உரிய அமைப்புகளுக்கு வழங்காமல் எடுத்து பயன்படுத்தியுள்ள தொகை குறித்து வலியுறுத்தினோம்.
விடுப்பு ஒப்படைப்பு, நிலுவை தொகை, திருமண முன் பணம், சேமப்பணியாளர் தின ஊதியத்தை ஒப்பந்தப்படி உயர்த்தி வழங்குவது போன்றவற்றுக்கும், நிதி இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தோம்.
ஆனால் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. பேச்சுவார்த்தையும் கண் துடைப்பு அடிப்படையில் நடந்தது. எனவே தொழிற்சங்கங்கள் சார்பில் அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம்.
மக்கள் சந்திப்பு இயக்கம்
தமிழகத்தின் மிக முக்கியமான சேவைத்துறையான போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கவும், தொழிலாளர் நலனை பாதுகாக்கவும் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தை அரசு உருவாக்கியுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதென இந்த கூட்டம் தீர்மானிக்கிறது. வேலை நிறுத்தத்துக்கு தொழிலாளர்களை ஆயத்தப்படுத்தும் அடிப்படையில் 9-ந்தேதி அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வாயிற்கூட்டம் நடத்துவது எனவும் இந்த கூட்டம் முடிவு செய்கிறது.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், வேலை நிறுத்த போராட்டத்திற்கும் ஆதரவு கோரி பொதுமக்கள் மத்தியில் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது எனவும் கூட்டமைப்பு முடிவு செய்கிறது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
தொ.மு.ச. பேரவை
முன்னதாக, தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் பேசுகையில் கூறியதாவது:-
பேச்சுவார்த்தை என்ற பெயரில் தொழிலாளர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது. அமைச்சர் வராத நிலையில் பேச்சுவார்த்தைக்கு சென்றது நம்முடைய தவறு. இந்த அரசுக்கு மக்களை பற்றியோ? தொழிலாளர்களை பற்றியோ அக்கறை இல்லை. 50 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
தொழிலாளர்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை. வேலைநிறுத்த போராட்டத்தை கையில் எடுக்காமல் காலம் தாழ்த்தியது மக்களுக்காகத்தான். ஆனால் இந்த அரசுக்கு பொறுப்பு இல்லை. எனவே நம்முடைய முடிவை மக்களுக்கு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன் பேசுகையில், ‘இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வேண்டும். தமிழகம் ஸ்தம்பிக்க வேண்டும். ஆளுங்கட்சியினர் பஸ்களை இயக்க முயற்சி செய்வார்கள். ஆனால் நாம் போராட்டத்தை முழு அளவில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்றார்.