“100 ஆண்டுகளில் பூமியை விட்டு வெளியேறு மனிதா!” - ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் தியரி
அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தை கண்டறிந்து அங்கே குடி புக வேண்டியிருக்கும் என சொல்லி அதிர்ச்சியை தந்திருக்கிறார் பிரபல அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.
பிபிசி தொலைக்காட்சிக்காக Expedition New Earth என்ற ஆவணத் தொடர் ஒன்றினை ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் படமாக்கியிருந்தார். அதில் தான் மனிதர்கள் இந்தப் பூமியை விட்டு செல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
“நாளைய உலகம்” என்ற தலைப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு தொடரை பிபிசி வெளியிட்டிருந்தது. இதுவும் அதன் தொடர்ச்சிதான் என்கிறது பிபிசி.
உலகம் அழிவதை பற்றி ஏற்கெனவே ஒரு முறை ஸ்டீஃபன் ஹாக்கிங் குறிப்பிட்டிருந்தார். அப்போது 1000 ஆண்டுகளில் பூமி மனிதர்களால் அழியும் என்றார். இப்போது இந்த ஆவணப்படத்துக்காக உலகை சுற்றி வந்தவர், “அதற்கு 100 ஆண்டுகளே போதும். அதற்குள் வேறு கிரகம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஆபத்து எந்த நேரமும் பூமியை தாக்கலாம்” என வருத்ததுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பல காரணங்களை அவர் பட்டியிலிட்டிருக்கிறார். அதில் முக்கியமான மூன்று விஷயங்கள் இவைதான். புவி வெப்பமயமாதல், அணு ஆயுத போர் மற்றும் ஆஸ்ட்ராய்டு எனப்படும் சிறு கோள்களின் மோதல்.
ஸ்டீஃபன் ஹாக்கிங் குறிப்பிடும் மூன்று காரணங்களில் இரண்டினை நம்மால் இப்போதே உணர முடிகிறது. குளோபல் வார்மிங் நாளுக்கு நாள் தீவிரமான பிரச்னையாக மாறிக்கொண்டே வருகிறது. வறட்சியால் உலகம் முழுவதுமே தாகத்துடன் இருக்கிறது. காடுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. மீதி காட்டை மனிதர்கள் அழித்துக் கொண்டே வருகிறார்கள். தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் மடிவது பாரபட்சம் இல்லாமல் உலகம் முழுவதுமே பரவியிருக்கும் விஷயமாக இருக்கிறது. வெயில்லோ, மழையோ, பனியோ… அனைத்துமே “வரலாறு காணாத” ரெக்கார்டுகளை தினம் தினம் படைத்துக் கொண்டே இருக்கின்றன. சென்ற ஆண்டு மழை பல இடங்களை நாசம் செய்ததையும் மறக்க முடியாது.
புவி வெப்பமயமாதல்
அணு ஆயுதங்களினால் நடைபெறவிருக்கும் அழிவைப் பற்றியும் ஸ்டீஃபன் ஹாக்கிங் குறிப்பிடுகிறார். சமீபத்தில் தான் சிரியா தாக்குதலில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அடுத்து வட கொரியா அமெரிக்கா பிரச்னையும் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்காவில் இருக்கும் 38 நார்த் என்ற அமைப்பு, 'வட கொரியாவை செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் எடுத்ததில் அந்த நாடு அணு ஆயுத சோதனைக்கு ஆயத்தமாகி வருவது போல் தெரிகிறது' என்று கூறியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் போர் மூளும் ஆபத்து இருக்கிறது. அப்படி நடந்தால் நிச்சயம் அணு ஆயுதங்கள் பெரிய பங்கு வகிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.