ரத்த ஓட்டம் சீராக உதவும் 10 வழிமுறைகள்!

இடைவிடாமல் இயங்கும் ஒரு தொழிற்சாலை நம் உடல். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் அவை செயல்படுவதற்கான  ஆற்றல் இருந்தால்தான் மொத்த உடலாலும் சீராக இயங்க முடியும்.  நம் உடல் உறுப்புகளுக்குத்தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாகத்தான் கிடைக்கிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் ரத்தம் சரியாக வழங்காதபோது உடலில் பிரச்னை தொடங்குகிறது.


ரத்த ஓட்டம்

உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க, ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கவேண்டியது அவசியம். `சில நல்ல உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றினால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் 10 வழிமுறைகள் இங்கே...

கிரீன் டீ

இதில் ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ் மற்றும் கேட்டச்சின் போன்றவை உள்ளன. இவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி ஓட உதவுபவை. இதனால் ரத்த ஓட்டம் சீராக்கும். எனவே, தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பூண்டு

பூண்டை `ரத்தத்தைச் சுத்திகரிக்கக்கூடிய டானிக்’ என்றே சொல்லலாம்.  இதைச் சமையலில் சேர்த்துக்கொண்டால், உணவுக்கு நறுமணத்தையும் சுவையையும் கூட்டும். அதோடு, கூடுதல் பலனாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.

இரும்புச்சத்துள்ள உணவுகள்

இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.  உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கக்கூடியது ஹீமோகுளோபின். எனவே, உடல் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். தானியங்கள், கீரைகள், பருப்புகள், இறைச்சி (Red Meat)  மற்றும் கிட்னி பீன்ஸ் (Kidney beans) போன்ற இரும்புச்சத்து நிறைந்தவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மிளகு

உணவுப் பொருள்களில் காரச் சுவைக்கு சேர்க்கப்படும் மிளகு, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடியது. இதை அன்றாடம் ஏதேனும் ஓர் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் உடல் முழுவதற்கும் செல்லும்.

தக்காளி

உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள 'லைகோபைன்' ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

நட்ஸ்

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3  என்னும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்துகள் நிறைவாக உள்ளன.

டார்க் சாக்லேட்

`டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும்’ என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. டார்க் சாக்லெட்டுகளை சாப்பிடுவதும், ரத்த ஓட்டம் சிறக்க நல்லது.

புகைபிடிக்காதீர்கள்

புகைபிடிக்கும்போது சிகரெட்டின் புகையிலையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, ரத்த அழுத்தை அதிகரிக்கச் செய்வது. எனவே, நீண்ட நாள் புகைப் பழக்கம் தொடரும்போது, அது ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

மது பழக்கம்

அதிக அளவில் மது குடிப்பது, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். குறிப்பாக, தமனிகள் கடினமாக ஆவதற்கு வழிவகுக்கும். இதனால், ரத்த ஓட்டம் தடைப்படும். மேலும்  ஆல்கஹால் பயன்பாடு  டிஹைட்ரேஷனை (Dehydration) ஏற்படுத்தும்; ரத்த அழுத்தம் ஏற்பட வழி வகுக்கும்.

உடற்பயிற்சி

சைக்கிளிங், ரன்னிங், வாக்கிங், எக்சர்சைஸ் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியைச் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad