நோய்களைத் தடுக்கும் பானகம்!
உணவே மருந்து
கோயில்களில் வழங்கப்படும் பானகத்துக்கு மருத்துவரீதியாகப் பலன்கள் இருக்கிறது என்று சொல்கிறார்களே... அப்படி என்ன அதில் சிறப்பு?. அதன் செய்முறை பற்றிச் சொல்ல முடியுமா?
பதில் அளிக்கிறார் சித்த மருத்துவர் முகம்மது உசேன்
‘‘வெப்ப மண்டலப் பகுதியான நம் நாட்டில் உஷ்ணம் காரணமாக வியர்க்குரு, உடல் எரிச்சல், கண் எரிச்சல், அதிக தாகம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவது சாதாரணம். இவை வராமல் தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்தான் பானகம்.சின்னம்மை நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் 3 வேளையும் பானகத்தைக் குடித்து வந்தால் நோயின் தீவிரம் குறையும். இதற்காகவே கோடை காலத்தில் கோயில்களில் பானகம் தருகிறார்கள்.
சித்த மருத்துவத்தில் செந்தூரம், பதங்கம் போன்ற மருந்துகளைத் தயாரிக்க நெருப்பு முன்பு பல மணி நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஏற்படுகிற உடல் சூடு, கண் எரிச்சல் போன்றவற்றை தடுக்கப் பானகத்தையே பயன்படுத்துகிறோம்’’ என்றவரிடம் பானகம் தயாரிப்பு முறையைச் சொல்லுங்கள் என்று கேட்டோம்.
‘‘சுத்தமான மண்பானை நீர் - 2 லிட்டர், பழைய புளி - 100 கிராம், பனை வெல்லம் - 1/4 கிலோ, எலுமிச்சை பழம் - 3, வேப்பமொட்டு - 10 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான 2 லிட்டர் நீரில் பழைய புளியை நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர், கைகளைச் சுத்தமாகக் கழுவிகொண்டு புளியைக் கரைக்க வேண்டும். அந்த நீரை வடிக்கட்டி தனியாக சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன், எலுமிச்சம்சாறு, பனைவெல்லம் ஆகியவற்றை நன்கு கலந்தால் பானகம் தயார்.
இந்த பானகத்தைப் பெரியவர்கள் 200 மிலியும், சிறுவர், சிறுமியர் என்றால் 50 மிலியும், குழந்தைகள் 25 மிலியும் குடிக்கலாம். முக்கியமாக, உணவுவேளைக்குப் பிறகு 5 நிமிடங்கள் கழித்துப் பானகம் பருகுவது முழுமையான பலன் தரும்.’’