உடல் அசதியை போக்கும் ஆரஞ்சு, கொத்தமல்லி நீர்
தற்போது நிலவி வரும் அதிகளவு வெப்பத்தால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். நாவறட்சி, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், தோல் எரிச்சல், கொப்பளங்கள், வெடிப்பு, கட்டிகள் போன்ற பாதிப்பு ஏற்படும். கோடைகாலத்தில் ஏற்படும் உடல் அசதியை போக்கும். கொத்தமல்லி இலையை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: கொத்தமல்லி, எலுமிச்சை, தேன். கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து கொள்ளவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்க்கவும். தினமும் ஒரு தடவை குடித்துவர உடல் புத்துணர்வாக இருக்கும். உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
அதிக உஷ்ணத்தால் தோல் வறட்சி, கண்களில் எரிச்சல், அதிக தாகம், வியர்வை, துர்நாற்றம், வியர்குரு போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு கொத்தமல்லி மருந்தாகிறது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆரோக்கியம் தரவல்லது.
ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தி உடல் அசதிக்கான பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆரஞ்சு பழம், சீரகப்பொடி, தேன். ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது நீர்விடவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகப்பொடி, தேன் சேர்த்து குடித்துவர உடல் அசதி போகும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது. கல்லீரலை பலப்படுத்தும். ஆரஞ்சில் பல்வேறு சத்துக்கள் உள்ளன.
நன்மைகளை கொண்ட ஆரஞ்சு, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது. உஷ்ணத்தை குறைக்கிறது. உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.பருப்பு கீரையை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பருப்பு கீரை, சீரகப்பொடி, உப்பு. பருப்பு கீரையை நீர்விட்டு சுத்தம் செய்து எடுக்கவும். இதனுடன் சீரக பொடி, சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வாரம் இருமுறை குடித்துவர கோடைகால நோய்களை தடுக்கலாம். வியர்குரு, அம்மை, அக்கி வராமல் பாதுகாக்கலாம்.
கோழி கீரை என்று பருப்பு கீரையை கூறுவதுண்டு. பறவைகள் விரும்பி சாப்பிடும் இந்த கீரை, அதிக சத்துக்களை உள்ளடக்கியது. குழந்தைகளின் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு, குங்குமப்பூ, பால், தேன். குளிர்ந்த பாலில் ஓரிரு குங்குமப்பூ, பாதாம் பொடி சேர்க்கவும். இதனுடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களது உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும். பாதாம் பல்வேறு நன்மைகளை கொண்டது.