மேடை நாடகத்தில் நடிகருக்கு இனிப்பு ஊட்டிய நடிகை மீது மனைவி தாக்குதல்
கொப்பள்:
மேடை நாடகத்தில் ஹீரோவின் வாயில் ஹீரோயின் தனது வாய் மூலம் இனிப்பு ஊட்டியதை பார்த்த ஹீரோவின் மனைவி தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. உண்மையென்று நம்பி பார்த்து கொண்டிருந்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தின் சோகால கிராமத்தில் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடகத்தில் கதாநாயகனாக நடித்த கோபண்ணா, கதாநாயகியாக நடித்த சாவித்ரி (இருவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரின் டூயட் பாட்டு இடம் பெற்றது.
அதில், கதாநாயகி தனது வாயில் இருக்கும் இனிப்பை கதாநாயகன் வாயில் கொடுப்பதுபோல் காட்சி வந்தது. அதை பார்த்த கதாநாயகனின் உண்மையான மனைவி காந்திமதி, ஆவேசமாக மேடை ஏறி, ‘‘எனது கணவன் வாயில் இனிப்பு ஊட்டிவிட நீ யார்?’’ என்று கேள்வி எழுப்பியதுடன், சாவித்ரியின் தலைமுடியை பிடித்து ஓங்கி ஓங்கி அடித்தார். அதை பார்த்த கிராம மக்கள் சில நிமிடம் நாடகத்தில் இதுவும் ஓரு காட்சி என்று ரசித்து கொண்டிருந்தனர். சாவித்ரி தாக்கப்படுவதை பார்த்த கோபண்ணா, உடனடியாக அவரை வேறு அறைக்கு அழைத்து சென்று காப்பாற்றினார்.
பின்னர் மேடைக்கு வந்த கோபண்ணா, அநாகரீகமாக நடந்து கொண்ட காந்திமதியை கடுமையாக எச்சரித்தார். அதில் கோபமடைந்த காந்திமதி, கணவருடன் சண்டை போட்டார். அப்போது தான், இது நாடகத்தில் வந்த காட்சியல்ல என்பது கிராமத்தினருக்கு தெரிந்தது. உடனே நாடக ஆசிரியர், கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் காந்திமதியை சமாதானம் செய்தனர். இதனால் சோகால கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. சாவித்ரி சமாதானமடைந்ததை தொடர்ந்து மீண்டும் சமூக நாடகம் அரங்கேறியது. ஆனால் கதாநாயகி, காந்திமதியிடம் வாங்கிய அடியை மறக்க முடியாமல் அச்சத்துடன் நாடகம் நடத்தி முடித்து பரிதாபமாக சென்றார்.