அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து குழப்பம் : இரு அணிகள் இணைவதில் நீடிக்கிறது சிக்கல்
சென்னை : அதிமுக இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இணைப்பு குறித்து நடைபெற்று வரும் ரகசிய பேச்சுவாரத்தை இழுபறியாக இருப்பதால் பன்னீர் மற்றும் எடப்பாடி அணிகள் இணைவதில் சிக்கல் தொடர்கிறது. இரு அணிகள் இணைய வேண்டுமானால் சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென்பது பன்னீர் அணியின் நிபந்தனைகளில் ஒன்று ஆகும். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவகத்தில் இருந்த சசிகலா படங்கள், பேனர்கள் அகற்றப்பட்டது. இதற்கு சசிகலா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 33 ஆண்டு காலம் கட்சிக்கு உழைத்தவரை உதாசினப்படுத்தி விட கூடாது என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் இரு அணிகளும் இணைவது நிச்சயம் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். இரு அணிகள் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமியே தமிழக முதலமைச்சராக நீடிப்பார் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக பன்னீர் மற்றும் எடப்பாடி தரப்பு மூத்த நிர்வாகிகள் நேற்று மூன்றாவது நாளாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். நிபந்தனைகளில் பன்னீர் தரப்பினர் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலையே தொடர்வதாக தெரிகிறது. ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே அணிகள் இணைப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.