ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் சிக்கினார்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலையில், உடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர்தான் குற்றவாளி என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு 90-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பிரம்மாண்ட  பங்களா உள்ளது.ஜெயலலிதா இங்கு வந்து ஓய்வு எடுத்து செல்வார்.

மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா இல்லாத நேரங்களில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களை தவிர யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது. அரசின் உயர் அதிகாரிகள் கூட ஜெயலலிதா உத்தரவு கிடைத்தால் மட்டுமே கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைய முடியும்.

அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக கொடநாடு எஸ்டேட் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கொடநாடு எஸ்டேட்களை இழந்தது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனவே அபராத தொகை வசூலிக்க கொட நாடு எஸ்டேட் கையகப்படுத்தப்படும் என்ற பரபரப்பு தொற்றியது.

மிகவும் பாதுகாப்பு நிறைந்த கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தங்ககட்டிகள், தங்க, வைர நகைகள், கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள், கட்சி தொடர்பான முக்கிய ஆவணங்கள் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அதிகாலை 2 கார்களில் வந்த முகமூடி கொள்ளையர்கள் கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்து 10-வது நுழைவு வாயிலில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொடூரமாக கொலை செய்து உடலை தலைகீழாக கட்டி தொங்கவிட்டனர். மேலும் 9-வது கேட்டில் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து முகமூடி கும்பல் ஜெயலலிதாவின் அறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயலலிதா அறையில் இருந்த 3 சூட்கேஸ்கள் திறக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். ஆனால் அதில் என்ன இருந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை.

இதற்கிடையே இந்த கொலை -  கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜெயலலிதா இருக்கும்போது அடிக்கடி கொடநாடு வந்து சென்ற சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் காயத்துடன் உயிர் தப்பிய கிருஷ்ண பகதூரின் ரத்த மாதிரி, கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இவை இரண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணையில் இப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓம் பகதூரைக் கொன்றது, உடன் இருந்த கிருஷ்ண பகதூர்தான் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்துகொண்டு கொலைசெய்துள்ளார்.

 பிறகு,அந்தக் கையுறையைத் தீயிட்டு எரித்துள்ளார். ஆனால், அந்தக் கையுறையில் ஒரு விரல் மற்றும் எரியவில்லை. இந்தத் தடயத்தைக் காவல்துறை கைபற்றி, ஆய்வுசெய்தது. அந்தக் கையுறையில் இருந்த கைரேகையை ஆய்வுசெய்தபோது, கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் பொருந்தியது. எனவே, கிருஷ்ண பகதூர்தான் கொலைக் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url