அட்லிக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ரீதிவ்யா
ராஜா ராணி, தெறி படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் 61வது படத்தை இயக்கும் அட்லி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் தயாரிக்கிறார். கமல்ஹாசன் உதவியாளர் ஐக் இயக்குகிறார். தயாரிப்பாளர் ஆனது பற்றி அட்லி கூறும்போது: இயக்குனராக இருந்து நான் மட்டும் சம்பாதித்துக்கொண்டிருப்பதை விட என்னைப்போன்ற இயக்குனர்களின் திறமையையும் வெளிக்கொண்டுவரவே தயாரிப்பாளர் ஆனேன். இப்படத்தில் ஜீவா ஹீரோ.
ஸ்ரீதிவ்யாவை எனக்கு பிடிக்கும். எனது படத்தில் நடிக்க அவரிடம் கால்ஷீட் கேட்டிருந்தேன். அப்போது பிஸியாக இருந்ததால் கிடைக்கவில்லை. என் இயக்கத்தில் நடிக்க முடியாவிட்டாலும் என்னுடைய தயாரிப்பில் நடிக்கிறார். ராதாரவி, ராதிகா, தம்பிராமையா, ராஜேந்திரன், மயில்சாமி, கோவை சரளா நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசை. சத்தியன் சூர்யன் ஒளிப்பதிவு’ என்றார்.
இப்பட ஆடியோவை வெளியிட்ட கமல்,’ இது ஆவி கதை. அதை நன்றாக கவர் செய்திருக்கிறார்கள். தெர்மாகோல் போல் கவர் செய்யவில்லை. நீங்கள் வேறு எதையும் நினைக்க வேண்டாம்’ என்றார். சமீபத்தில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு அணை தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மா கோல்களை பரப்பி கிண்டலுக்கு ஆளானதுபற்றி மறைமுகமாக கமல் குறிப்பிட்டபோது அரங்கில் சிரிப்பொலியும், கைதட்டலும் எழுந்தது.