அதிக தாகம் ஆபத்தா?
தாகம்... நம் உடல் உஷ்ணத்தை தட்பவெப்பநிலையின் இயல்புக்கு ஏற்பவும், புவியின் சூழலுக்கு ஏற்பவும் வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் அற்புத அலெர்ட். தாகம், மனிதர்களுக்கு இயல்பானது. உணவு அருந்திய பின்னரும், உடற்பயிற்சி, உடல் உழைப்பில் ஈடுபட்ட பின்னரும், வெயிலில் அலைந்து திரியும்போதும் தாகம் ஏற்படுவது இயற்கையானது. ஆனால், சிலருக்கு திடீரென அடிக்கடி தாகம் ஏற்படும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு அடங்கவே அடங்காது. இப்படி திடீரென அதிகரிக்கும் நீர் வேட்கை, உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
நம் உடல் 70 சதவிகிதம் நீராலானது. சிறிய திசுக்கள் முதல் எலும்புகள் வரை அனைத்திலும் நீர் உள்ளது. உடலில் நீரின் அளவு குறையும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. நம் ஒவ்வொரு செல்லும் உயிர்வாழ ஆக்சிஜன் அவசியம். எனவே, நீர்த்தேவையை உணர்த்துவதற்கான சமிக்ஞையை, மூளை ஏற்படுத்துகிறது. அதுவே தாகம்.பொதுவாக, ஆரோக்கியமான ஒரு நபருக்கு, தினசரி சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். மூன்று லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் பருகுவதற்கான தாகம் இருந்தால் அதை அதீத தாகம் எனலாம்.
அதீத தாகம் என்பது உடலில் ஏதோ பிரச்னை என்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். ஒருவருக்கு சளிப்பிடிப்பதற்கு முன்புகூட அதீதமான தாகம் இருக்கும். இதைத்தவிர, தாகம் மேலும் சில பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.உடலில் உள்ள திரவங்கள் தேவையான அளவு சுரக்காமல், அதில் பற்றாக்குறை ஏற்படும்போது, உடலில் நீரின் அளவு குறைய தொடங்கும். இதனால், நீர்ப்போக்கு ஏற்பட்டு, அதீத தாகம் ஏற்படுகிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளன. உடல்நிலை சரியாக இல்லாமல் இருப்பது, வெயிலில் அதிக நேரம் அலைவது, வேலை செய்வது, உடல் உபாதைகளால் அதிகமாக வியர்ப்பது, அதிகமாக சிறுநீர் கழிப்பதுரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, சிறுநீரகத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாமல் தவிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அதீத தாகம் ஏற்படும். எனவே அதீத தாகம், தொடக்க நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். உஷார்..! 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்ந்து அதீத தாகம் இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான வாய்ப்பு 70 சதவிகிதம் உள்ளது. எனவே, உடனடியாக சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.