ஐசிசி அதிரடி முடிவால் பிசிசிஐ-க்கு வருவாய் இழப்பு
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிர்வாக அமைப்பில் புதிய மாற்றங்கள் அறிமுகமாவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் கணிசமான வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன் மூலமாக ஐசிசி-க்கு கிடைக்கும் வருமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக பங்கு கிடைக்கும் வகையில் கடந்த 2014ம் ஆண்டு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த 3 கிரிக்கெட் வாரியங்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் வகையில், நிர்வாக அமைப்பில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதுடன் வருவாய் பகிர்விலும் திருத்தங்கள் மேற்கொள்ள ஐசிசி முடிவு செய்தது.
இதற்கு பிசிசிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், துபாயில் நேற்று நடந்த ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் புதிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக 1-9 என்ற கணக்கில் வாக்குகள் பதிவானது. வருவாய் பகிர்வு தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பிசிசிஐ 2-8 என பின்தங்கியது. இலங்கை மட்டுமே பிசிசிஐக்கு ஆதரவாக வாக்களித்தது. தற்போது ஐசிசி தலைவராக உள்ள சஷாங்க் மனோகர், பிசிசிஐ முன்னாள் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி நிர்வாகக் குழுவின் இந்த அதிரடி முடிவால், பிசிசிஐ பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.