'நன்றி தலைவா': ரஜினி வாழ்த்துக்கு சச்சின் மகிழ்ச்சி
சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறை ஆவணப்படுத்தும் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு சச்சின் பதிலளித்துள்ளார். இவர்களது உரையாடல்தான் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை சொல்லும் படம் ’சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’. இது ஒரு ஆவணப்படமாகும். ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது.
இதைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், "அன்பிற்குரிய சச்சின், சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சினை குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சச்சினும், "நன்றி தலைவா. படத்தை தமிழில் பார்த்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்" என பதிலளித்து தமிழ் பதிப்பின் ட்ரெய்லரையும் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் உலக ஜாம்பாவன், மற்றும் இந்தியத் திரையுலக ஜாம்பவான் என இரண்டு உயர்ந்த ஆளுமைகள் சமூக வலைதளத்தில் சகஜமாக உரையாடியது வைரலாக பரவிவருகிறது.
சச்சின்... படம் பல மாநில மொழிகளில் மே 26ஆம் தேதி வெளியாகிறது.