வடகொரியாவுடன் மோத வேண்டாம் அமெரிக்காவுக்கு சீனா அறிவுரை


பெய்ஜிங்:
வடகொரியாவுடன் மோத வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் திடீர் அறிவுரை கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமல், 4 முறை அணுகுண்டு, ஒருமுறை ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து சோதித்தது. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே வட கொரியாவின் ராணுவம் அமைக்கப்பட்ட 85வது ஆண்டு தினம்  இன்று கொண்டாடப்பட உள்ளது. அப்போது அணு குண்டு சோதனை அல்லது ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா முடிவு செய்துள்ளது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கார்ல் வின்சன் என்னும் மிகப்பெரிய விமானந்தாங்கி போர் கப்பலை கொரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து, ஜப்பானுடன் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.  இதனால், வட கொரியா - அமெரிக்கா இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் வலுத்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரியாவை தாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் பேச்சு தொடர்பாக வெளியான செய்தி விவரம்:  கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம்.

இருதரப்பினரும் அமைதியாக நடக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. மொத்தத்தில் பதற்றத்தை தணிக்க வேண்டும். கொரிய தீபகற்பத்தில் அணு சக்தி அற்ற முறையை அடையவும், வடகொரியாவின் அணுப்பிரச்னைக்கு தீர்வுகாணவும் இருதரப்பினரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டாம். இவ்வாறு தொலைபேசி உரையாடலின்போது டிரம்ப்பிற்கு சீன அதிபர் ஆலோசனை தெரிவித்ததாக சீன அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url