முதலில் குடும்பத்தினரின் சந்தோஷம் முக்கியம்: ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
முதலில் அப்பா - அம்மா - மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரின் சந்தோஷம்தான் முக்கியம் என ரசிகர்கள் மத்தியில் பேசும் போது நடிகர் சூர்யா தெரிவித்தார்.
நாயகனாக நடிப்பது, படங்கள் தயாரிப்பது என மும்முரமாக இருந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் ரசிகர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் சூர்யா. சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சூர்யா தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசியது, "சூர்யா ரசிகர்கள் என்று மட்டும் உங்களுடைய அடையாளம் இருக்கக்கூடாது. ஒவ்வொருவரும் எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதில் உங்களுடைய ஒட்டுமொத்த பலத்தையும் போடுங்கள். வெறும் கடின உழைப்பு மட்டுமே இருந்தால் சோர்ந்துவிடுவோம், பணம் மட்டுமே இருந்தால் செலவாகிவிடும். ஆசையும், அதில் அளவுகடந்த ஆர்வம் இருந்தால் மட்டுமே உங்களுக்கு என்று ஒரு அடையாளம் பிறக்கும். அப்படி மட்டுமே உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.
25 வயதுக்குள் என்னவாக வேண்டும் என்பதை முடிவுசெய்து அதில் முழுகவனத்தையும் செலுத்துங்கள். உங்களுடைய முதல் கடமை அப்பா, அம்மாவை சந்தோஷப்படுத்துவதாக இருக்க வேண்டும். எவ்வளவு வயதனாலும் அப்பா - அம்மாவை திரும்பி பார்த்து சந்தோஷமாக இருக்கிறார்களே என கவனித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், அவர்களுக்கு என்ன தேவை என்று ஒரு மனது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். திருமணமானவர்கள் மனைவி, குழந்தையோடு நேரம் செலவழிப்பதும் மிகவும் முக்கியம்.
மனைவியோடு தனியாக அழகாக பேசும் நேரமும் மிகவும் முக்கியம். அவர்களுக்கு அனைத்தும் தெரியும் பார்த்துக் கொள்வார்கள் என இருந்துவிடாதீர்கள். அப்பா - அம்மாவுக்கு பிறகு மனைவிக்கு என்ன தேவை என்பதை கண்டிப்பாக பாருங்கள்" என்று பேசினார்.
மேலும், தனது படத்தைப் பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 20 நாட்கள் படப்பிடிப்பு இன்னும் மீதியிருப்பதாகவும், விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகும் என தெரிவித்தார். விரைவில் 'சிங்கம்' பாகங்கள் தவிர்த்து வேறொரு கதையில் மீண்டும் ஹரியோடு இணைந்து பணிபுரிய இருப்பதாகவும் குறிப்பிட்டார்.