ஹவாலா மூலம் ரூ.1.3 கோடி கொடுத்தது எப்படி? : தினகரன் வீட்டில் சோதனை
* பெங்களூர், கொச்சிக்கும் அழைத்து சென்று விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு
சென்னை : இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக ஹவாலா மூலம் ரூ.1.3 கோடி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து டிடிவி தினகரன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரது வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடைபெற்றது. அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தினகரனின் மனைவி அனுராதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை சசிகலா அணிக்கு பெற்றுத் தருவதற்காக டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பண பரிமாற்றம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஓட்டலில் சோதனை நடத்தியதில் பெங்களூரைச் சேர்ந்த பிரபல குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.1.3 கோடி ரொக்கம் சிக்கியது. இந்தப் பணம் முழுவதும் ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகளாகும். இந்தப் பணத்தைக் கைப்பற்றிய போலீசார், சுகேஷ் சந்திரசேகரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இரட்டை இலையைப் பெறுவதற்காக டிடிவி தினகரன்தான் தனக்கு ஹவாலா மூலம் பணம் கொடுத்தார் என்று சுகேஷ் தனது வாக்குமூலத்தில் கூறினார். அதைத் தொடர்ந்து, தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் கொடுத்து விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். அந்த சம்மனை ஏற்றுக் கொண்ட தினகரன், டெல்லி சென்று குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். தொடர்ந்து 4 நாட்கள்கள் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, பிடிபட்ட பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் யாரிடமும் பணத்தைக் கொடுக்கவில்லை. சுகேஷ் யார் என்றே தெரியாது என்றார். ஆனால், சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரனுடன் செல்போனில் பேசிய ஆடியோவை போட்டுக் காட்டியபோது ‘‘இது தன்னுடைய குரல்தான். பேசியது நான்தான். பணம் ஹவாலா மூலம் கொடுத்ததும் உண்மைதான். தனக்கு உதவியாக 16 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்தனர். பணத்தை சில அமைச்சர்கள்தான் எனக்கு கொடுத்தனர். என் வீட்டில் வைத்துத்தான் அமைச்சர்களிடம் பணம் பெறப்பட்டது. பின் அந்த பணம் ஹவாலா ஏஜென்ட்களிடம் வழங்கப்பட்டது. அவர்கள் முதல் கட்டமாக ரூ.1.3 கோடி கொடுத்துள்ளனர். மீதி பணம் ஹவாலா ஏஜென்ட்களிடம்தான் இருக்கும்’’ என்று அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து தினகரனை போலீசார் கடந்த 25ம் தேதி கைது செய்தனர். மேலும், பணத்தை கொடுப்பதற்கு உதவிய தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அதில் மல்லிகார்ஜூனாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தினகரன், மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் 26ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையம் 5 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அன்று இரவு முழுவதும் தினகரன், மல்லிகார்ஜூனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று காலையில் இருவரையும் விமானத்தில் சென்னைக்கு பிற்பகல் 1.10 மணிக்கு அழைத்து வந்தனர். விமான நிலையத்தில், தினகரனை பார்க்க கட்சியினர் யாரும் வரவில்லை. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உட்பட 5 பேர்தான் இருந்தனர். தினகரனுடன், உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் மற்றும் 5 போலீசார் வந்திருந்தனர். இருவரையும் போலீசார் பாதுகாப்பாக வெளியில் அழைத்து வந்தனர். சென்னை போலீசார் ஏற்பாடு செய்த காரில் ஏறாமல், தாங்களே ஏற்பாடு செய்த ஒரு காரில் இருவரையும் ஏற்றிக் கொண்டு, பெசன்ட்நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு வைத்து இருவரிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர், பெசன்ட்நகரில் உள்ள தினகரன் வீட்டுக்கு மாலை 4.20 மணிக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். வீட்டில் வைத்துத்தான் அமைச்சர்கள் பணம் கொடுத்தார்கள் என்று தினகரன் கூறியுள்ளதால், அவரது மனைவி அனுராதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரன் வீட்டில் நேற்று இரவு 10.30 மணி வரை சோதனை நடந்தது. சோதனையின்போது தினகரன், அனுராதா மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் அப்ரூவராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் போலீசில் ஏராளமான தகவல்களை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தினகரன் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அடுத்தகட்டமாக அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் விசாரணை முடித்து, தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரை கொச்சி, அல்லது பெங்களூருக்கு டெல்லி போலீசார் இன்று அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மல்லிகார்ஜுனா வீட்டிலும் சோதனை
தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஆனால் சென்னை அண்ணாநகர் சாந்திகாலனி ஏ.எச்.பிளாக்கில் 3 மாடிகள் கொண்ட பங்களாவில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் முன் உள்ள கேட், பட்டன் மூலம் திறக்கும் தானியங்கி வகையை சேர்ந்தது. இந்த வீட்டை 4 ஆண்டுகளாக பிரமாண்டமாக கட்டியுள்ளார்.
இந்த வீட்டுக்கு அடிக்கடி சசிகலா மற்றும் தினகரன் அவர்களது உறவினர்கள் வந்து தங்கிச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த வீட்டுக்கு டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், மல்லிகார்ஜூனாவை நேற்று இரவு 8.22 மணிக்கு அழைத்து வந்தார். இரவு 9.20க்கு சோதனை முடித்து விட்டு கிளம்பினர். வீட்டில் மல்லிகார்ஜூனாவின் மனைவி, மருத்துவம் படிக்கும் மகன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். சோதனை நடக்கும் தகவல் வெளியானதால் மக்கள் கூடினர். இதனால் வீட்டுக்கு வெளியே உள்ளூர் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.