10-வது ஐபிஎல் தொடர்: குஜராத் அணியில் இர்பான் பதான் சேர்ப்பு, பிராவோ விலகல்
குஜராத் லயன்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக பிராவோ விலகியிருப்பதால் இர்பான் பதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை,
10-வது ஐபிஎல் கிரிகெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஐபில் தொடரில் லீக் ஆட்டங்களில் அசத்தி வந்த சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி நடப்பு ஆண்டு தடுமாறி வருகிறது. தற்போது வரை 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் குஜராத் லயன்ஸ் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியில் இடம் பெற்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த டிசம்பர் 2016-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடியபோது பிராவோவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதற்காக, கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் ஒரு போட்டியில் கூட குஜராத் அணிக்காக களமிறங்காத நிலையில் தொடரிலிருந்தே விலகியுள்ளார்.
இந்நிலையில், அவரது இடத்தை நிரப்பும் மாற்று வீரராக இந்திய வீரர் இர்பான் பதான் குஜராத் அணியில் சேர்க்கப்ப்ட்டுள்ளார். கடந்த ஆண்டு புனே அணிக்காக விளையாடிய பதான், இந்த ஆண்டுக்கான ஏலத்தில் குறைந்தபட்ச ஏலத்தொகையான ரூ.50 லட்சத்திற்குக்கூட விலை போகவில்லை.