சத்தமில்லாமல் சாதித்த மெட்ரோ
சில சிறிய படங்கள் நன்றாக இருந்தாலும் அந்த படம் சென்சாருக்கு தப்பி தியேட்டருக்கு வந்து ஓடுவது என்பது பெரிய சாதனை. அப்படி சமீபத்தில் சாதித்த படம் மெட்ரோ ஆள்; படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் சொந்தமாக தயாரித்து இக்கினார், சிரிஷ் என்ற புதுமுகத்துடன் சத்யா, பாபி சிம்ஹா, செண்ட்ராயன், மாயா நடித்திருந்தனர். ஜோகன் இசை அமைத்திருந்தார், உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் நகரில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களின் கருப்பு பக்கத்தை மிக ஆழமாக விவரித்த படம். கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக எப்படி செயின் பறிப்பு திருடர்களாக மாறுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. படத்தை பார்த்த தணிக்கை குழு “இது மக்கள் பார்க்கவே கூடாத படம் அதனால் சான்றிதழ் தர முடியாது” என்று மறுத்துவிட்டது. அதன் பிறகு ஆனந்த கிருஷ்ணன் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்று தணிக்கை சான்றிதழ் வாங்கினார்.படம் கடந்த மாதம் 24ந் தேதி வெளிவந்தது. மீடியாக்கள் பாராட்டி எழுதியதை தொடர்ந்து லேட் பிக்கப் ஆகி ஒடத் தொடங்கியது. முன்னணி இயக்குனர்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்கள். ஏ சான்றிதழ் படம் என்பதால் மக்கள் குடும்பத்தோடு பார்க்கவரவில்லை. அதையும் மீறி 25 நாட்கள் படம் ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது. அடுத்து இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். இந்தியிலும் ரீமேக் உரிமம் விலை பேசப்பட்டு வருகிறது. ஆக சத்தமே இல்லாமல் சாதித்து விட்டது மெட்ரோ