பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர் தாக்கு
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயிப் அக்தர் கூறியதாவது: பாகிஸ்தான் அணியினர் திட்டமிட்டு விளையாடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எதிர்பார்த்தது போலவே, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தோலுரித்துக் காட்டிவிட்டனர். பவுன்சருக்கு சாதகமான ஆடுகளங்களில் பாகிஸ்தான் அணி எப்போதுமே போராட்டத்தை சந்திக்கிறது. அதனால் தான் ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் தோல்வியைச் சந்திக்கிறோம். இதேபோல், பந்துவீச்சாளர்களும் திட்டமிட்டு திறம்பட செயல்படவில்லை. இத்தகைய தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் பின்னடைவில் இருந்து மீள்வது கடினம் என்றார் ஷோயிப் அக்தர்.