ஓடும் ரெயிலில் அனில் கபூர் சாகசம் செய்ததால் சர்ச்சை
பிரபல இந்தி நடிகர் அனில் கபூர், இந்தி தொடர் ஒன்றில் ரெயில் நிலைய அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பிற்காக அனில் கபூர் மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் மின்சார ரெயில் ஒன்றில் பயணிகளுடன் மும்பை சென்டிரல் ரெயில் நிலையம் வரையிலும் பயணம் செய்தார். அப்போது அவர் மின்சார ரெயிலின் வாசற்படியில் கம்பியை பிடித்து கொண்டு வெளியே தொங்கியபடி சாகசம் செய்ததாக தெரிகிறது. இதை உடன் பயணித்த யாரோ செல்போனில் படம் பிடித்து உள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்ளில் வேகமாக பரவி வருகிறது. சாகசம் என்ற பெயரில் பயணிகள் அவ்வப்போது மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், அனில் கபூர் ஓடும் ரெயிலில் சாகசம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், அனில் கபூரை படப்பிடிப்பிற்காக அழைத்து வந்த டி.வி. தொடர் தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம்கேட்டு மேற்கு ரெயில்வே நோட்டீசு அனுப்பி உள்ளது