சிரஞ்சீவியுடன் நடிக்க மறுத்த காஜல்அகர்வால்
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். ‘கத்திலண்டோடு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் இளம் நாயகனுமான ராம்சரண் தயாரித்து வருகிறார். வி.வி.நாயக் இயக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சிரஞ்சீவி இரட்டை வேடத்தில் நடிக்கும் இதில் அவருடன் நடிக்க பிரபல நாயகியை ஒப்பந்தம் செய்ய ராம்சரண் செய்யாத முயற்சிகளை எல்லாம் செய்து வருகிறார். ஆனால் எந்த நடிகையும் சிக்காமல் ‘எஸ்கேப்’ ஆகிக்கொண்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில், நாயகி யார் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதில் நடிக்க பிரபல இந்தி நடிகைகளுக்கு குறி வைத்தார்கள். அதில் யாரும் சிக்கவில்லை. அனுஷ்கா என்றார்கள், நயன்தாரா என்றார்கள் யாரும் ‘செட்’ ஆகவில்லை. சிரஞ்சீவிக்கு ஜோடி என்றாலே இளம் நடிகைகள் ஏதாவது காரணத்தை சொல்லி தப்பிக்கவே பார்க்கிறார்கள். வாய்ப்பே இல்லாத நடிகைகள்கூட சம்பளத்தை 4 மடங்கு உயர்த்தி நழுவி விடுகிறார்கள். சமீபத்தில் காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படங்களான ‘பிரமோற்சவம்’, ‘சர்தார் கப்பார் சிங்’ இரண்டுமே எதிர்பார்த்தபடி ஓடவில்லை. என்றாலும், இவரையாவது ஜோடி ஆக்கிவிடலாம் என்று ராம்சரண் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் காஜல் அகர்வால் தனது சம்பளத்தை பலமடங்கு உயர்த்தி கேட்டு அதிர்ச்சி அளித்திருக்கிறார். இதனால் இந்த முயற்சியும் பலிக்கவில்லை. வேறு நாயகிகளை தேடுகிறார்கள். சிரஞ்சீவிக்கு நாயகி கிடைப்பது தொடர்ந்து சிக்கலாகவே இருந்து வருகிறது.