மலேசியாவில் பிரபலமாகும் ‘கபாலி’ பிரியாணி
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலகளவில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதேபோல், இதுவரை எந்த சினிமாவுக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் விளம்பரங்களும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. ‘கபாலி’ படத்தின் ஏர்-லைன் பார்ட்னராக கைகோர்த்துள்ள ஏர்-ஏசியா விமான நிறுவனம், ‘கபாலி’ படத்தின் போஸ்டரை தனது நிறுவன விமானம் ஒன்றில் ஒட்டி, ஆகாயம் வரை ‘கபாலி’யின் புகழை பறைசாற்றியுள்ளது. அதுமட்டுமில்லாமல், பலவிதங்களிலும் இப்படத்தின் புரொமோஷன்கள் புதுப்புது முறையில் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இருக்கும் வரவேற்பு மலேசியாவிலும் உள்ளது. அதனால், மலேசியாவிலும் இப்படத்திற்காக பலவிதங்களில் புரோமாஷன்கள் செய்து வருகின்றனர். இதன் ஒருவடிவமாக மலேசியாவின் பிரபல ஹோட்டல் ஒன்றில் ‘கபாலி’ பெயரில் பிரியாணி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதை வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, ஏர்-ஏசியா விமான நிறுவனம் தங்களது விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ‘கபாலி’ பெயரில் பிரியாணி வழங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது உணவகங்களிலும் ‘கபாலி’ பெயரில் பிரியாணி வழங்குவது பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இந்தியாவையும் தாண்டி ஒரு தமிழ் படத்துக்கு வெளிநாடுகளில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது ரஜினி என்ற ஒரு மாபெரும் மனிதருக்காக மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.