விவ் ரிச்சர்ட்ஸைச் சந்தித்து உரையாடிய இந்திய வீரர்கள்
பயிற்சி ஆட்டம் முடிந்து முதல் டெஸ்ட் போட்டிக்காக ஆன்ட்டிகுவா வந்த இந்திய அணியினர் தீவிர பயிற்சி அமர்வுக்கு முன்பாக மேற்கிந்திய முன்னாள் சூரர் விவ் ரிச்சர்ட்ஸைச் சந்தித்து உரையாடினர். ஒரு மாலைப்பொழுதை விவ் ரிச்சர்ட்ஸுடன் இந்திய அணி வீரர்களான கோலி, ராகுல், முரளி விஜய், ஷிகர் தவண், ஸ்டூவர்ட் பின்னி, ரஹானே ஆகியோர் செலவிட்டனர். அந்தச் சந்திப்பின் போது விவ் ரிச்சர்ட்ஸ் இந்திய வீரர்களுக்கு நிறைய உற்சாகமூட்டினார். விராட் கோலி ஆஸ்திரேலியாவில் அடித்த 4 டெஸ்ட் சதங்களை குறிப்பிட்டு விவ் ரிச்சர்ட்ஸ் அவரை பாராட்டி வாழ்த்தினார். மேலும் விராட் கோலியின் அதிரடி அணுகுமுறையையும் அவர் விதந்தோதினார். அதே போல் அஜிங்கிய ரஹானே பற்றி விவ் ரிச்சர்ட்ஸ் குறிப்பிடும் போது, அமைதியான ஆக்ரோஷமும், நல்ல உத்தியுமுடைய இவர் பெரிய பேட்ஸ்மெனாகும் சாத்தியமுள்ளது என்றார். ஸ்டூவர்ட் பின்னியிடம் பேசும்போது 1983 உலகக்கோப்பையில் தந்தை ராஜர் பின்னியின் பங்களிப்பு பற்றி பேசினார் விவ்.
நல்ல உடல்/மன தகுதியுடன் உடைய அணி எந்த சவாலிலிருந்தும் பின்வாங்கக்கூடாது, எதிர்த்துப் போராடி ஆட்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார் விவ் ரிச்சர்ட்ஸ்.