இலங்கையில் அசத்தும் ஆஸ்திரேலியா
இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அசத்தி வருகிறது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் யூலை 30 திகதி நடக்கிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்கேற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது . இதன் படி, முதல் இன்னிங்சில் அந்த அணி 229 ரன்களை குவித்தது. அணித்தலைவர் சிறிவர்த்தனே (53), குணரத்னே (58) ஆகியோர் அரைசதம் விளாசினர். டி சில்வா 49 ரன்கள் எடுத்தார். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி சார்பில், சுழல் வீரர் ஸ்டீவ் ஓ’கீபே 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆட ஆரம்பித்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. இன்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 431 ரன்களை எடுத்துள்ளது. ஜோ பர்ன்ஸ் (72), அணித்தலைவர் சுமித் (57), ஸ்டீவ் ஓ’கீபே (62) ஆகியோர் அரைசதம் அடித்தனர். தவிர, ஷான் மார்ஷ் (47), ஆடம் வோக்ஸ் (43), மிட்செல் ஸ்டார்க் (45) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இலங்கை லெவன் அணி சார்பில் ஷெகன் ஜெயசூரியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கை லெவன் அணியை விட 202 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.