மே.இ.தீவுகளில் ஸ்பின்னர்களுக்கு பெரும் பங்கு உள்ளது: தோனி கருத்து
புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றிற்கிடையே செய்தியாளர்களிடம் தோனி பேசியதாவது:
மே.இ.தீவுகளில் பிட்ச்கள் மெதுவாகவே அமையும். ஆனாலும் நிச்சயமாகக் கூறிவிட முடியாது. ஸ்பின்னர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
அணியில் போட்டிகள் இருக்கும் போது அது சிறப்பானதுதான். 8-10 பவுலர்கள் அணியில் தேர்வு செய்யப்படுவதற்காக தயார் நிலையில் காத்திருப்பது அணிக்கு நல்லது. ஓராண்டுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் சில பவுலர்கள் காயமடைந்ததை நான் நினைவில் கொள்ள வேண்டும்.
அனைத்துப் பகுதிகளையும் கவர் செய்யும் பவுலர்கள் நம்மிடையே உள்ளனர். வேகப்பந்து வீச்சு என்றால் அதற்கும் வீரர்கள் உள்ளனர், ஸ்விங் பந்து வீச்சுக்கும் ஆட்கள் உள்ளனர். ஆனால் காயம் குறித்த மேலாண்மையில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆனால் பேட்டிங்கில் நல்ல தரம் உள்ளது, நிலையான 6 வீரர்கள் பேட்டிங்கில் உள்ளனர். ஓரிரண்டு புதுமுகங்கள் இருக்கலாம் ஆனால் அணிக்கலவை அப்படித்தான் இருக்க வேண்டும்.
நான் டெஸ்ட் கிரிக்கெட்டை இழந்துள்ளேன், ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை இது என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வழிவகை செய்துள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கும் இந்தக் காலக்கட்டம் என்னுடைய பயிற்சிக்கு உதவுகிறது. நான் உடற்பயிற்சி நிலையத்துக்கு அடிக்கடி செல்ல முடிகிறது. நிறைய ஓடுகிறேன், என் உடலை நன்றாக பராமரித்து வருகிறேன். 30 வயதுக்குப் பிறகே நாம் நம் உடல் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கடந்த 10 ஆண்டுகளில் கூடுதலான பயணங்களின் மூலம் என் உடலை துஷ்பிரயோகம் செய்துள்ளேன். குறிப்பாக சாப்பிடும் பழக்க முறை, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஆகவே நான் என் உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து வருகிறேன்.
இவ்வாறு கூறினார் தோனி.