ஆப்கான் வீரர் மொகமது நபிக்கு ஐசிசி எச்சரிக்கை
அயர்லாந்து வீரர் எட் ஜாய்ஸை மோசடியாக ரன் அவுட் செய்த குற்றச்சாட்டில் ஆப்கான் அணி வீரர் மொகமது நபிக்கு ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறன்று நடந்த ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வீரர் எட் ஜாய்ஸ் 6-வது ஓவரில் ரன் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் இது பந்தை எல்லைக்கோட்டிற்குள் பந்தை தடுத்து விட்டதாக மோசடியாகக் கூறிய மொகமது நபியினால் விளைந்த ரன் அவுட் என்று தெரியவந்தது.
230 ரன்கள் இலக்கை அயர்லாந்து துரத்தியது. ஆட்டத்தின் 6-வது ஓவரில் எட் ஜாய்ஸ் எக்ஸ்ட்ரா கவர் திசையில் டிரைவ் ஆடினார். பந்தை தடுக்கச் சென்ற ஆப்கன் வீரர் மொகமது நபி எல்லைக்கோட்டுக்குள் பந்தை தடுத்து விட்டதாகக் கோரி ரஷீத் கானிடன் பந்தை அளிக்க அவர் த்ரோ செய்ய பவுண்டரி என்று நினைத்து எட் ஜாய்ஸ் 3-வது ரன்னை பூர்த்தி செய்யாமல் நிற்க ரன் அவுட் செய்யப்பட்டது. 3-வது நடுவர் உதவி இப்போட்டிகளுக்குக் கிடையாது. எனவே, நடுவர் நபியிடம் கேட்ட போது தான் பவுண்டரிக்குள்தான் பந்தைப் பிடித்தேன் என்று சாதித்தார், பீல்டரின் வார்த்தைகளை நம்புவதைத் தவிர நடுவருக்கு இம்மாதிரி சூழ்நிலைகளில் வேறு வழியில்லை. நடுவரும் எட்ஜாய்ஸ் அவுட் என்றார்.
ஆனால் எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று லைவ் ஆக உள்ளப் பந்தை அவர் எல்லைக்கோட்டிற்கு வெளியேயிருந்து தடுத்தது புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரியவந்தது, அதாவது பந்து பவுண்டரி, 4 ரன்கள்! 3-வது ஒருநாள் போட்டியில் 105 ரன்கள் எடுத்து அயர்லாந்துக்கு வெற்றி தேடித்தந்த எட்ஜாய்ஸ் இந்தப் போட்டியில் மோசடியாக ரன் அவுட் செய்யப்பட்டதால் அயர்லாந்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய நேரிட்டது. நபியிடம் விசாரணைக்குழுவினர் கேட்கும் போது அவர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து கிரிக்கெட் ஆட்ட நேர்மை உணர்வு எனும் நடத்தை விதிமீறல் பிரிவில் மொகமது நபிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிறகு, 5வதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் எட் ஜாய்ஸ் 160 ரன்களை விளாசி பழிதீர்ப்பு வெற்றியை அயர்லாந்துக்குப் பெற்றுத் தந்ததோடு தொடரும் சமன் ஆனது