திமுகவுக்கு ஆதரவாக விஜய் ரகசிய உத்தரவு போட்டாரா
தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகமெங்கும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. சில கட்சிகளுக்காக சினிமா நடிகர் நடிகைகளும் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ரஜினி இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை அறிய மீடியாக்கள் அவரை கேட்டபோது, அதைப்பற்றி பேச மறுத்துவிட்டார். அதேபோல், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார் விஜய். அதன்காரணமாக அவரது ரசிகர் மன்றங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டன. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. என்றாலும், பின்னர் விஜய் படங்கள் வெளியாகும்போது சில தடைகளை சந்தித்தன. இந்நிலையில் இந்த தேர்தலில் விஜய், திமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பதாக கடந்த சில தினங்களாக இணையதளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது அதற்கு விஜய் சார்பில் அவரது ரசிகர் மன்றத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலைப்பொறுத்தவரை விஜய் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. திமுகவுக்கு ஆதரவாக செயல்படுமாறு ரசிகர் மன்றத்துக்கு அவர் ரகசிய உத்தரவு போட்டிருப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தியே என்று விளக்கமளித்துள்ளனர்