இந்த தேர்தலில் நோ வாய்ஸ் - வடிவேலு முடிவு
தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்த்தை எதிர்க்கிறேன் என திமுக., ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அங்கு அவர் திமுக.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததைவிட விஜயகாந்த்தை தான் அதிகமாக வசை பாடினார். ஆனால் அப்போது நடந்த தேர்தலில் திமுக., தோல்வியடைந்ததுடன் விஜயகாந்த்தின் தேமுதிக., எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் பெற்றது. அதுமட்டுமல்ல அந்த தேர்தலுக்கு பின்னர் வடிவேலுவின் சினிமா மார்க்கெட்டும் ஆட்டம் கண்டதும், அவர் பட வாய்ப்பின்றி இருந்ததும் அனைவரும் அறிந்ததே. இதனிடையே நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலு தெனாலிராமன், எலி படங்களில் நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவின. இந்நிலையில் தற்போது தனது கொள்கையை மாற்றி ஹீரோவாகவும், ஹீரோவுடன் பயணிக்கும் வேடங்களிலும் நடிக்க முன்வந்துள்ளார் வடிவேலு. அதன்படி, வடிவேலு தற்போது விஷாலின் கத்திச்சண்டை படத்தில் நடிக்கிறார். சுராஜ் இயக்கும் இப்படம் காமெடி கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று சிறப்பாக நடந்தது. இதில் வடிவேலுவும் கலந்து கொண்டார். அப்போது வடிவேலு இடத்தில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கிவிட்டது. இந்தமுறை உங்களது ஆதரவு யாருக்கு என்று கேட்டபோது அதற்கு பதிலளித்த வடிவேலு. நல்லா இருக்கு நியாயம் உன் சீலைல போச்சாம் சாயம் என்று பழமொழி பேசியவர், அதப்பத்தி விட்டுருங்க, இங்க என்ன பொதுக்குழுவா நடக்குது, நம்ம படத்தை பற்றி மட்டும் பேசுவோம் என்றார். இதுப்பற்றி வடிவேலு வட்டாரத்தில் விசாரித்தபோது, வடிவேலுவை பொறுத்தவரை இனி் சினிமாவில் தான் முழுகவனம் செலுத்த போகிறார் என்றார்கள். வடிவேலுவின் இந்த பேச்சு மூலம் ஒன்று மட்டும் தெளிவாகியுள்ளது. இந்தமுறை அவர் யாருக்காகவும் பிரச்சாரம் செய்யப்போவதில்லை