என் வழி தனி வழி ரகானே
பேட்டிங்கில் யாரையும் காப்பி அடிக்கவில்லை. எனது சொந்த ஸ்டைலில் விளையாடுகிறேன் என, ரகானே தெரிவித்தார். இந்திய வீரர் ரகானே, 27. ஒன்பதாவது ஐ.பி.எல்., தொடரில் புனே அணிக்காக விளையாடுகிறார். இதுவரை 12 போட்டியில் 6 அரைசதம் உட்பட 419 ரன் எடுத்துள்ளார். தனது பேட்டிங் ஸ்டைல் குறித்து ரகானே கூறியது: எனது பேட்டிங் சரியான பாதையில் தான் செல்கிறது. பந்தை நேராக எதிர்கொண்டு, வழக்கமான கிரிக்கெட் ஷாட் அடித்து விளையாடுவது தான் எனது வழக்கம். இதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். எனது வெற்றி ரகசியம் இது தான். இந்த ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்வதாக உணர்கிறேன். வேறு யாரையும் காப்பி அடித்து விளையாடுவதாக நினைக்கவில்லை. எனக்கென்று உள்ள ஸ்டைலில் தான் விளையாடுகிறேன். மனதை ஒருமுகப்படுத்த தினமும் தியானம் செய்யும் வழக்கம் எனக்கு உள்ளது. களத்தில் எதிர்முனையில் நிற்கும் போதும், பந்துகள் வீசப்படும் முன்பும், ஆழமான மூச்சுப்பயிற்சி செய்வேன். இதனால் பந்துகளை கடினமாக அடித்து விளையாட முடிகிறது கோஹ்லியுடன் போட்டி: தற்போதுள்ள இளம் தலைமுறை வீரர்களில் கோஹ்லி சிறப்பானவர். இவரது செயல்பாடுகளால் மிகவும் பெருமைப்படுகிறேன். மற்றபடி எனக்கும் இவருக்கும் போட்டி எதுவும் கிடையாது. கோஹ்லி அவரது ஸ்டைலில் விளையாடுகிறார். நான் எனது ஸ்டைலில் விளையாடுகிறேன். இருவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல.இந்தியாவுக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்பது தான் எங்களது ஒரே லட்சியம். இதற்காக இருவரும் கடினமாக உழைக்கிறோம். இப்போதைய நிலையில் எனது திறமையை மெருகேற்றுவதற்கு முக்கியத்துவம் தரப் போகிறேன். இவ்வாறு ரகானே கூறினார்.