இந்திய அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி 3 டி20-ஆக மாற்றப்பட்டது
வரும் ஜூன் மாதம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. உண்மையில் ஐசிசி-யின் எதிர்காலப் பயணத்திட்ட நிரல்களின் படி இந்திய அணி ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட வேண்டும். ஆனால், மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பயணம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட போது டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20 போட்டிகள் வைக்குமாறு ஜிம்பாப்வே தரப்பிலிருந்து கோரப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20-யாக மாற்றியதற்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் பிசிசிஐ உடனடியாக இந்த மாற்றத்துக்கு ஒப்புக் கொண்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் ஒருநாள் போட்டியுடன் பயணம் தொடங்குகிறது. ஜூன் 22-ம் தேதி 3-வது டி20 போட்டியுடன் தொடர் முடிவுக்கு வருகிறது. கடந்த ஜூலை 2015-ல் இந்திய அணி ஜிம்பாப்வே பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் 3-0 என்று வெற்றி பெற்று டி20 தொடரை 1-1 என்று டிரா செய்தது. கடந்த 6 ஆண்டுகளில் இந்திய அணி 4-வது முறையாக ஜிம்பாவே செல்கிறது.