மேற்கிந்திய தீவுகள் அணியை 25 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து
அயர்லாந்து அணி மேற்கிந்திய தீவுகளை 25 ரன்களில் சுருட்டி அனைவரையும் அதிர செய்த நிகழ்வும் நடந்திருக்கிறது. ஆனால் இந்தப் போட்டி நடந்து கிட்டத்தட்ட 47 வருடங்கள் ஆகிறது. 1969ம் ஆண்டு யூலை மாதம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இங்கிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் மற்றும் அயர்லாந்து அணியுடன் ஒரு ஒரு-நாள் மற்றும் ஒரு 2-நாள் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியது. இதில் ஒரு ஒரு-நாள் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி வரலாற்று சரிவை சந்தித்தது. 2 இன்னிங்சை கொண்ட அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது . அயர்லாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ரன்களிலே சுருண்டது. அதிகபட்சமாக சில்லிங்போர்ட் 9 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து 100 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து 2வது இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. அப்போது 22 ரன்கள் பின் தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இருந்தது. ஒருநாள் ஆட்டம் என்பதால் முதல் இன்னிங்சின் செயல்பாடை வைத்தே வெற்றி முடிவு செய்யப்படும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. அதன் படி முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் அயர்லாந்து அணி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் இல்லை. அப்படிபட்ட நிலையிலே மேற்கிந்திய தீவுகள் அணி அந்த அணியிடம் மண்ணை கவ்வியது.