தேசிய விருது 2வது முறையாக புறக்கணித்த இளையராஜா
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த சாதனை மனிதர் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் 63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைத்தற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுதவிர தமிழில், விசாரணை படத்திற்கு சிறந்த படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கிற்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. தேசிய விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று சிறப்பாக நடந்தது. ஆனால் இந்த விழாவில் இளையராஜா பங்கேற்கவில்லை. இளையராஜா, தேசிய விருதை புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே 2010-ம் ஆண்டு பழசிராஜா படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். அப்போது அவர் புறக்கணித்தார். முதல்படத்திற்கே விருது பெற்ற ரித்திகா ரியல் பாக்ஸரான ரித்திகா சிங், மாதவனுடன் இறுதிச்சுற்று படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தனது அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்தார். அதனால் அவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடந்த தேசிய விருது விழாவில் ரித்திகா சிங் தனது முதல் தேசிய விருதை பெற்றார். அதுவும் முதல்படத்திற்கே அவருக்கு தேசிய விருது கிடைத்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விசாரணை படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி கையால் நடிகர் சமுத்திரகனி பெற்றுக்கொண்டார். இவர்கள் தவிர நடிகர் அமிதாப்பச்சன், நடிகை கங்கனா ரணாவத், இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்றனர்