தீவிர தேடலில் பி.சி.சி.ஐ
பிரிமியர் தொடருக்குப் பின் இந்திய அணிக்கு பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த இடத்துக்கு உலகின் முன்னணி வீரர்கள் இடையே போட்டி காணப்படுகிறது. இந்திய அணி பயிற்சியார் டங்கன் பிளட்சர், 67. கடந்த 2015 உலக கோப்பை தொடருடன் பதவி முடிந்தது. இதன் பின் இயக்குனர் ரவி சாஸ்திரி அணியை கவனித்து வந்தார். இவரது 18 மாத கால பதவியும், டுவென்டி 20 உலக கோப்பை தொடருடன் முடிந்தது. கோஹ்லி உள்ளிட்டோர் ஆதரவுடன் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆகலாம் எனத் தெரிகிறது. இவ்விஷயத்தில் சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய ஆலோசனை கமிட்டியின் முடிவுக்காக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) காத்திருக்கிறது. இதனிடையே, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி 20 என, மூன்றுவித அணிக்கும், மூன்று பயிற்சியாளரை நியமிக்கும் எண்ணமும் பி.சி.சி.ஐ.,யிடம் இருப்பதாக தெரிகிறது. இதனால் பல்வேறு முன்னாள் வீரர்கள் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. இதில் ரவி சாஸ்திரிக்கு அடுத்த இடத்தில் மக்களின் மனம் கவர்ந்த தேர்வாக, டிராவிட் உள்ளார். இந்தியா ஏ 19 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக உள்ள இவர், பொருத்தமான தேர்வாக இருக்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பான செய்திகளை டிராவிட்டும் மறுக்கவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஜஸ்டின் லாங்கர், போட்டியில் உள்ளார். மேற்கு ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளராக இருக்கும் இவர், தேசிய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக உள்ளார். அடுத்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கில்லஸ்பி, சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், மைக்கேல் ஹசி உள்ளிட்டோரும் இந்திய பயிற்சியாளர் பதவி குறித்து தங்களது ஆர்வத்தை தெரிவித்தனர். இருப்பினும், கிரெக் சாப்பல் சர்ச்சைக்குப் பின் ஆஸ்திரேலிய வீரர்களை நியமிக்க பி.சி.சி.ஐ., பெரும் தயக்கம் காட்டி வருகிறது. மீண்டும் கிறிஸ்டன்?: சென்னை மற்றும் தற்போதைய புனே அணிக்கு பயிற்சியாளராக உள்ள ஸ்டீபன் பிளமிங்கும் (நியூசி.,) இப்பதவிக்கு பரிந்துரைக்கப்படுவார் எனத் தெரிகிறது. இவருடன் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி, இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன்டி பிளவரும் போட்டியில் உள்ளனர். தவிர, 2011ல் இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த பயிற்சியாளர் கிறிஸ்டன் (தென் ஆப்ரிக்கா), மீண்டும் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை