என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி
திரையுலகத்தில் நடிகராக அறிமுகமாவது கடினமான ஒரு விஷயம். அப்படியே அறிமுகமாகி மேலே வருவது அதைவிடப் பெரிய விஷயம். அப்படி மேலே வந்த பிறகு கிடைத்த பெயரையும், வெற்றியையும் தக்க வைத்துக் கொள்வது பெரிய பெரிய விஷயம். சிலருக்கெல்லாம் எதிர்பாராத வெற்றி கிடைத்து அவர்களை எங்கேயோ உயரத்தில் உட்கார வைத்துவிடும். அதன் பின் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல் சறுக்கியவர்கள் நிறைய பேர். அதைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் இன்று வரை சூப்பர் ஸ்டார்களாகவும், உலக நாயகன்களாகவும் இருக்கிறார்கள்.விஜய் சேதுபதிக்கு அப்படி ஒரு வேகமான வளர்ச்சி 2012ம் ஆண்டு கிடைத்தது. 2013ம் ஆண்டிலும் அந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டார். 2014ல் கதைகளைச் சரியாகத் தேர்வு செய்யாமல் கோட்டை விட்டு, தொடர்ச்யிக 5 தோல்விப் படங்களைக் கொடுத்தார். கடந்த ஆண்டு கடைசியில் வந்த நானும் ரௌடிதான்; படம் அவரை மீண்டும் கரை சேர்த்துள்ளது. இருந்தாலும் தற்போது ஒரே சமயத்தில் இடம் பொருள் ஏவல், மெல்லிசை, இறைவி, சேதுபதி, தர்மதுரை ஆகிய படங்கள் அவருடைய அடுத்தடுத்த வெளியீடாக வரிசை கட்டி நிற்கின்றன.;இடம் பொருள் ஏவல், மெல்லிசை ஆகிய படங்கள் நீண்ட காலமாக வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றன. ;இறைவி, சேதுபதி இறுதிக் கட்டப் பணிகளில் உள்ளன. தர்மதுரை படப்பிடிப்பு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. இவற்றில் எந்தப் படத்தை முதலில் வெளியிட்டால் தன்னுடைய மார்க்கெட்டுக்கு நல்லது என்பதை விஜய் சேதுபதி புரிந்து கொண்டு வெளியிட வேண்டும் என்று வினியோகஸ்தர்களும், ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். முதலில் வரும் படத்தின் வெற்றி மற்ற படங்களையும் காப்பாற்றி விடும், ஆனால், தப்பித் தவறி தோல்வியடைந்தால் அது மற்ற படங்களையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது.